வெளிநாட்டு ஊழியர் தீர்வைக் கழிவு நீட்டிப்பு

வெளிநாட்டு ஊழியர் தீர்வைக் கழிவு நீட்டிப்பு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் உள்ள கட்­டு­மா­னம், கடல்­துறை கப்­பல் பட்­டறை, உற்­பத்தி ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த எல்லா ஒர்க்­பெர்­மிட் ஊழி­யர்­க­ளுக்­கும் செலுத்தப்பட வேண்டிய $250 வெளி­நாட்டு ஊழி­யர் தீர்வை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக இந்­தத் துறை­களில் எழுந்த சிர­மங்­க­ளைத் தணிக்­கும் நோக்­கில் தீர்வை தள்­ளு­படி சலுகை கடந்த ஆண்டு அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

இந்த டிசம்­பர் 31ஆம் தேதி­யு­டன் இந்த சலுகைக்கான காலம் முடி­வ­டைய இருந்த நிலை­யில் அது நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை, உயர்ந்­து­விட்ட செலவு போன்­ற­வற்றை எதிர்­நோக்­கும் இந்­தத் துறை­க­ளுக்கு உத­வும் நோக்­கு­டன் தள்­ளு­படி நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

இவ்வாறு சலுகையை நீட்டிப்பதன் மூலம் சுமார் 15,000 நிறு­வ­னங்­க­ள் பலன்பெறும்.

தற்­போ­தைய ஊழி­யர்­க­ளுக்­கும் தொற்று அபா­யம் குறை­வாக உள்ள நாடு­ கள் அல்­லது வட்­டா­ரங்­களில் இருந்து இனி வர­வ­ழைக்­கப்­படும் ஒர்க் பெர்­மிட் ஊழி­யர்­க­ளுக்­கும் இந்தத் தீர்வை தள்­ளுபடி­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது பற்றி முத­லா­ளி­கள் பரி­சீ­லிக்­க­லாம்.

அண்­மைய வாரங்­க­ளாக இந்­தத் துறை­க­ளுக்கு அதிக ஊழி­யர் வந்­து­கொண்­டி­ருக்­கும் நிலை­யில் நீட்­டிப்பு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை மேலும் ஒரு­முறை நீட்­டிக்­க வேண்டிய தேவை இருக்குமா­ என்­பது குறித்து 2022 மார்ச் நெருங்­கும் சம­யத்­தில் முடி­வெ­டுக்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

மேலும், பணிப்­பெண்­கள் உட்­பட எல்லா வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் அறி­விக்­கப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர் தீர்­வைக் கழி­வும் அடுத்த ஆண்டு டிசம்­பர் வரை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

இவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­வு­டன் இல்­லத்­த­னிமை உத்­த­ரவை நிறை­வேற்­றும் காலத்­திற்­கும் வெளி­நாட்டு ஊழி­யர் அறி­முக நிகழ்ச்­சிக்­கான காலத்­திற்­கும் இந்த தீர்வைக் கழிவு அளிக்­கப்­ப­டு­கிறது.