சிங்கப்பூரில் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கை வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 27) தொடங்கவுள்ளது. அதற்கான பதிவு இன்று (டிசம்பர் 22) தொடங்கும்.
தொடக்கநிலை 4 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்படும். தொடக்கநிலை 1 முதல் 3 வரை படிக்கும் சிறுவர்களுக்கான பதிவு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும்.
2009 முதல் 2012 வரை பிறந்த மற்றும் கல்வி அமைச்சின் பள்ளிகளில் இடம்பெறாத இதர சிறுவர்களுக்குத் தடுப்பூசி போட அவர்களது பெற்றோர் பதிவுசெய்யலாம். சுகாதார அமைச்சின் தேசிய பதிவுமுறையில் அவர்கள் பதிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு (2013க்கும் 2017க்கும் இடையில் பிறந்த) எல்லாக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பதிவு ஜனவரி 10 முதல் தொடங்கும். இவர்களின் பெற்றோரும் தேசிய பதிவுமுறையில் பதிவு செய்யலாம்.
கல்வி அமைச்சும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பும் தடுப்பூசி போடும் நடவடிக்கை பற்றிய விவரங்களை நேற்று வெளியிட்டன.
தீவு முழுவதும் உள்ள 15 குழந்தை தடுப்பூசி நிலையங்களில் கட்டம் கட்டமாக 300,000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். அவற்றில் ஏழு நிலையங்கள் டிசம்பர் 27 முதல் செயல்படும். 2022 ஜனவரி முதல் மேலும் ஏழு நிலையங்கள் இயங்கும்.
ஜனவரி 11ல் இருந்து யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் ஒரு தடுப்பூசி நிலையம் செயல்படும். இவை பற்றிய முழு விவரங்கள் vaccine.gov.sg இணையத்தளத்தில் கிடைக்கும்.
12 வயது, அதற்கும் குறைந்த வயதுள்ள குழந்தைகளைப் பெற்றோர் அல்லது பொறுப்பாளர் தடுப்பூசி போட அழைத்து வரவேண்டும்.
தடுப்பூசி நிலையத்திற்கு அவர்களை அழைத்துவரும் பெற்றோர், மாணவர் அடையாள அட்டை அல்லது கடப்பிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்ற இதர ஆவணத்தைக் கொண்டு வரவேண்டும்.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அட்டையில் உள்ளவர்
களாக இருக்கும் சிறுவர்கள் இந்தத் தடுப்பூசிக்குத் தகுதிபெறுவர்.
சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் இன்று முதல் சிங்கப்பூர் வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
5 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறுவர்களுக்கான பதிவு இன்று தொடக்கம்

