'விடிஎல்' மூலம் சிங்கப்பூர் வர டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை புதிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்திவைப்பு

'விடிஎல்' மூலம் சிங்கப்பூர் வர டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை புதிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்திவைப்பு

1 mins read
87ea673b-ea97-4baf-9305-90645bf1ca95
'விடிஎல்' திட்டம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நவம்பர் 30ஆம் தேதி சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள். படம்: திமத்தி டேவிட் -

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) வியாழக்கிழமை (டிசம்பர் 23) முதல் ஜனவரி 20ஆம் தேதிவரை புதிய விமானப் பயணச்சீட்டுகளை விற்பனை செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களிடம் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் அதன் எல்லை நடைமுறைகளைக் கடுமையாக்குகிறது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தரைவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் பயணம் செய்வோருக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.

எனினும், 'விடிஎல்' திட்டத்தின்கீழ் பயணம் செய்ய ஏற்கெனவே பயணச்சீட்டுகளை வாங்கியோர், தொடர்ந்து பயணம் செய்யலாம்.

புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 22) அறிவித்தது. சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிக்கு இந்த அறிவிப்பு பெரும் பின்னடைவாகும்.

"ஓமிக்ரான் திரிபை ஆராய்ந்து அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, நம்முடைய எல்லை நடைமுறைகள் நமக்கு அவகாசம் வழங்கும். நமது சுகாதாரப் பராமரிப்பு முறையின் ஆற்றலை மேம்படுத்தவும் கூடுதலானோருக்கு பூஸ்டர் தடுப்பூசியைப் போடவும் இந்த ஏற்பாடு அவகாசம் வழங்கும்," என்று அமைச்சு விவரித்தது.

இதற்கிடையே, ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு பயணம் செய்வதற்கான 'விடிஎல்' பயணச்சீட்டு விற்பனையிலும் தற்காலிகமாக வரம்பு விதிக்கப்படும்.

அதாவது, ஜனவரி 21ஆம் தேதியில் இருந்து 'விடிஎல்' விமானங்களில் பயணிகள் சிங்கப்பூர் வருவதற்காக விற்பனைக்கு விடப்படும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.