ஜனவரி 5 முதல் தொடக்கநிலை 1-3 மாணவர்களுக்கு தடுப்பூசி

ஜனவரி 5 முதல் தொடக்கநிலை 1-3 மாணவர்களுக்கு தடுப்பூசி

2 mins read

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை தொடக்­க­நிலை 1 முதல் 3 வரை­யில் படிக்­கும் மாண­வர்­க­ளுக்­குப் போடு­வ­தற்­கான பதிவுக் காலம், அடுத்த மாதம் ஐந்­தாம் தேதி முதல் தொடங்­கு­கிறது.

இந்­ந­டை­முறை, கல்வி அமைச்­சின் கீழ் இயங்­கும் பள்­ளி­கள் மற்­றும் மத­ரசா பள்­ளி­களில் படிக்­கும் மாண­வர்­களுக்­குப் பொருந்­தும்.

இதே வய­துப் பிரி­வில் எஞ்­சிய மற்ற மாண­வர்­க­ளுக்கு ஜன­வரி ஆறாம் தேதி முதல் தடுப்­பூ­சிப் பதிவு காலம் தொடங்­கும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை­யான ஓமிக்­ரான், அதி­க­மா­கக் கண்­ட­றி­யப்­பட்டு வரும் நிலை­யில் இந்த அறி­விப்பு வந்­துள்­ளது.

முன்­ன­தாக இம்­மா­தம் 22ஆம் தேதி முதல் தொடக்­க­நிலை 4 முதல் 6 வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்­குத் தடுப்­பூ­சிப் பதி­வுக் காலம் தொடங்­கி­யது.

சுகா­தார அமைச்­சி­ட­மி­ருந்து மாண­வர்­க­ளின் பெற்­றோ­ருக்­குத் தடுப்­பூசி தொடர்­பில் குறுந்­த­க­வல் அழைப்­பு­கள் அனுப்­பப்­பட்­டன.

இதன்­படி கிட்­டத்­தட்ட 110,000 குறுந்­த­க­வல்­கள் அனுப்­பப்­பட்­ட­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

அப்­பி­ரி­வில் 40 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் சார்­பில் அவர்­களின் பெற்­றோர் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­து­விட்­ட­தாக நேற்று திரு சான் தக­வல் அளித்­தார்.

சென்ஜா-கேஷ்யூ சமூக மன்­றத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள தடுப்­பூசி மையத்­தைப் பார்­வை­யிட நேற்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சே­ரி­யுடன் திரு சான் சென்­றி­ருந்­த­போது இத­னைத் தெரி­வித்­தார்.

இன்று முதல் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடத் தொடங்­கும் ஏழு மையங்­களில் அது­வும் ஒன்று.

பூன் லே வட்­டா­ரத்­தில் உள்ள நன்­யாங் சமூக மன்­றம், அவர் தெம்­ப­னிஸ் ஹப், பாசிர் ரிஸ் எலை­யஸ் சமூக மன்­றம், உட்­லண்ட்ஸ் கேலக்சி சமூக மன்­றம், நீ சூன் ஈஸ்ட் சமூக மன்­றம், ஹவ்­காங் சமூக மன்­றம் ஆகி­ய­வற்­றி­லும் இன்று முதல் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணி­கள் தொடங்­கு­கின்­றன என்று கூறப்பட்டது.

பிள்­ளை­க­ளுக்­கென மொத்­தம் 15 தடுப்­பூசி நிலை­யங்­கள் சிங்­கப்­பூ­ரில் அமைக்­கப்­படும் நிலை­யில், எஞ்­சிய எட்டு நிலை­யங்­கள் ஜன­வரி மாதம் முதல் இரண்டு கட்­டங்­க­ளாக இயங்­கத் தொடங்­கும் என்று அறியப்படுகிறது.

சிங்­கப்­பூ­ரில் 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சுமார் 300,000 பிள்­ளை­களே, இது­வரை தடுப்­பூசி போட்­டி­ராத ஆகப் பெரிய குழு­வாக உள்­ள­னர். இப்­பி­ரி­வி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடு­வது குறித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று கல்வி அமைச்சு அறி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வருகை அட்டை வைத்­திருக்­கும் பிள்­ளை­கள் இத்­த­டுப்­பூ­சித் திட்­டத்­தின் கீழ் தகு­தி­பெ­று­வர்.

தற்­போது சிங்­கப்­பூர் சிறா­ருக்கு 'ஃபைசர்-பயோ­என்­டெக்/கமிர்­னட்டி' கொவிட்-19 தடுப்­பூ­சியை மட்­டுமே போடு­வ­தற்கு அர­சாங்­கம் ஒப்­பு­தல் வழங்கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் தடுப்­பூசி தொடர்­பில் வரு­கைப்­ப­திவு செய்­வ­தற்­கான வரிசை, தடுப்­பூசி போடு­வ­தற்­கான இடம், காத்­தி­ருக்­கும் இடம், கண்­கா­ணிக்­கும் இடம் எனத் தடுப்­பூசி நிலை­யத்­தில் சிறா­ருக்­கெ­னத் தனி இடங்­கள் ஒதுக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.