வரும் நாள்களில் புதியதொரு கொவிட்-19 அலையை சிங்கப்பூர் எதிர்பார்க்க வேண்டும்: அமைச்சர்

வரும் நாள்களில் புதியதொரு கொவிட்-19 அலையை சிங்கப்பூர் எதிர்பார்க்க வேண்டும்: அமைச்சர்

1 mins read
5b217c5e-1374-42aa-9f03-eaac48ed910e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எதிர்வரும் நாள்களிலும் வாரங்களிலும் புதியதொரு கொவிட்-19 அலை எழுவதை சிங்கப்பூர் எதிர்பார்க்க வேண்டும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

"ஓமிக்ரான் கிருமி எப்படி மற்ற நாடுகளில் பரவி வருகிறதோ, நமது சமூகத்திலும் அது பரவுவதைத் தவிர்க்க இயலாது. என்றாலும், அடுத்துவரும் இந்த அலைக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள, எங்களால் ஆன அனைத்தையும் செய்துள்ளோம். ஒன்றுபட்ட மக்களாக, இதையும் நம்மால் கடக்க முடியும்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 27) பதிவு ஒன்றை திரு வோங் வெளியிட்டார்.

ஓமிக்ரான் திரிபு கடந்த மாதம் உருவெடுத்தபோது, அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதுபற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கும் அதிகாரிகள் தொடக்கத்தில் கவனமான அணுகுமுறையைக் கையாண்டதாக திரு வோங் குறிப்பிட்டார்.

ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடிய திரிபாக இருந்தாலும், டெல்டா திரிபுடன் ஒப்பிடுகையில், கடுமையான நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் ஓமிக்ரானுக்குக் குறைவு என்பது தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஓமிக்ரான் ஏற்படுத்தும் கடுமையான நோய்ப் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதில் தற்போதைய தடுப்பூசிகளும் பூஸ்டர் தடுப்பூசிகளும் செயல்திறன் உடையவையாக இருப்பதாகவும் திரு வோங் தெரிவித்தார்.

டெல்டா திரிபைக் கையாள என்னென்ன பொதுச் சுகாதார நடைமுறைகள் நடப்பில் உள்ளனவோ, அதேபோல ஓமிக்ரானையும் கையாளுவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் மாற்றியமைத்து வருவதாக திரு வோங் கூறினார்.