90க்கும் மேற்பட்ட கொவிட்-19 விரைவு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

90க்கும் மேற்பட்ட கொவிட்-19 விரைவு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

2 mins read
a7f0c635-c3ae-4365-bbb3-492a43fa928d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதை மேலும் சௌகரியமாக்க, பயணிகளும் முன்களப் பணியாளர்களும் 90க்கும் மேற்பட்ட இடங்களில், பயிற்சிபெற்ற ஊழியர்களின் மேற்பார்வையின்கீழ் 'ஏஆர்டி' சுயபரிசோதனை செய்துகொள்ள முடியும். அந்த இடங்களில் பல்மருந்தகங்களும் மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதியும் அடங்கும்.

தீவு முழுவதும் 10 மருந்தகங்களில் இதற்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக 'கியூ&எம்' துணை நிறுவனமான 'அக்யுமென் டைக்னாஸ்டிக்ஸ்', ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளுக்கு அருகிலும் பிரபல கடைத்தொகுதிகளிலும் இந்தப் பரிசோதனை மையங்கள் அமைந்துள்ளன.

சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்கும் 'டாக்டர் எனிவேர்' நிறுவனம், அதன் எட்டு மருந்தகங்களில் பரிசோதனைச் சேவைகளை வழங்குகிறது.

'கேப்பிட்டலேண்ட்' நிறுவனம், அதன் ஆறு கடைத்தொகுதிகளில் விரைவு பரிசோதனை மையங்களை அமைக்க சுகாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

விரைவு பரிசோதனை மையத்துக்குச் செல்வோர் இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்களுடைய அடையாளத்தைச் சரிபார்த்துக்கொள்ள, தங்களுடைய பெயர், புகைப்படம் அடங்கிய ஆவணத்தை அவர்கள் உடன் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பரிசோதனைக்கான கட்டணம் $15.

தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைகள் (விடிஎல்) மூலம் சிங்கப்பூருக்கு வருவோருக்கான பயணிகளுக்குப் பரிசோதனை முறை கடுமையாக்கப்படுவதாக சுகாதார அமைச்சு டிசம்பர் 22ஆம் தேதி அறிவித்திருந்தது.

'விடிஎல்' பயணிகள் ஏஆர்டி பரிசோதனை செய்துகொண்டு உரிய நேரத்தில் அதன் முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சு நினைவுபடுத்தியது. அவ்வாறு செய்யாதோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படுவதுடன், தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் அமலாக்க நடவடிக்கைகளை எதிர்நோக்குவர்.

விரைவு பரிசோதனை மையங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளுக்கு வெளியேயும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாத் தலங்களிலும் கூடுதலான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 21ஆம் தேதி, ஹெவ்லக் பகுதியில் உள்ள காப்தார்ன் கிங்ஸ் ஹோட்டலில் விரைவு பரிசோதனை மையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆன்சன் சாலையில் உள்ள எம் ஹோட்டல் சிங்கப்பூரில் மற்றொரு மையம் ஜனவரி முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளது.

விரைவு பரிசோதனை மையங்களுக்கான முழுப் பட்டியலை https://www.moh.gov.sg/covid-19/quick-test-centres-(qtcs) எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.