உலக சுகாதார நிறுவனம்: ஓமிக்ரான் பரவலால் அதிக அபாயம் நீடிக்கிறது

உலக சுகாதார நிறுவனம்: ஓமிக்ரான் பரவலால் அதிக அபாயம் நீடிக்கிறது

2 mins read
8d819414-887e-4eeb-afe8-d6c2b3030913
ஏதன்ஸ் நகரின் மத்தியில் உள்ள மொனாஸ்டிராக்கி சதுக்கத்தில் நண்பர்கள் இருவர் பேசுகின்றனர். கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நாடுகளில் கிரீசும் ஒன்று. ஓமிக்ரான் வகைக் கிருமிப் பரவலால் பல நாடுகளில் கிருமித்தொற்று வெகுவிரைவாக கூடியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. -

உலகளாவிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் கடந்த வாரத்தில் 11 விழுக்காடு உயர்ந்ததை அடுத்து, ஓமிக்ரான் வகைக் கிருமியால் ஏற்படக்கூடிய அபாயம் இன்னமும் மிக அதிகமாகவே உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஓமிக்ரான் கிருமி டெல்டாவைவிட மிதமாக உள்ளது.

இருந்தாலும் அதன் பரவலால் பல நாடுகளில் சுகாதாரக் கட்டமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அமைப்பு தெரிவித்தது.

கொவிட்-19 குறித்து புதன்கிழமை (டிசம்பர் 29) அன்று வெளியிட்ட தனது வாரந்திர தொற்று ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் அவ்வாறு கூறியது.

ஓமிக்ரான் வகைக் கிருமிப் பரவலால் பல நாடுகளில் கிருமித்தொற்று வெகுவிரைவாகக் கூடியதாகவும் சில நாடுகளில் முந்தைய டெல்டா தொற்றுப் பரவலைவிட ஓமிக்ரான் தொற்றுப் பரவல் தான் பெரும்பான்மை வகிப்பதாகவும் அமைப்பு தெரிவித்தது.

"ஓமிக்ரான் கிருமிக்கு இரண்டு மூன்று நாள்களில் இரட்டிப்பாகும் ஆற்றல் உள்ளதால் அது டெல்டாவைவிட அதிகம் பரவக்கூடியது என்று சான்றுகள் காட்டுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரான்தான் அதிகம் பரவும் கிருமிவகையாக உள்ளது."

" உடலின் தடுப்பாற்றல் ஓமிக்ரானை அதிகம் கண்டறிய முடிவதில்லை. மேலும் அது அதிகம் பரக்கூடியது. இதனாால் தொற்றுப் பரவல் விகிதம் வெகுவாக உயர்ந்திருக்கக்கூடும்," என்று அமைப்பு கூறியது.

ஆனால் ஓமிக்ரான் வகையைக் கண்டறிந்து தெரிவித்த முதல் நாடான தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் 29 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

அதே நேரம், டெல்டா வகையைவிட ஓமிக்ரான் தொற்றியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவு என்று பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, டென்மார்க் ஆகியவற்றியிலிருந்து வரும் தகவல்கள் கோடிகாட்டுகின்றன.

உலக அளவில் கடந்த வாரம் கிட்டத்தட்ட 5 மில்லியன் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.

சுமார் 44,000 பேர் கொவிட்-19 கிருமி தொற்றி மாண்டனர்.

இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 4 விழுக்காடு குறைவு என்று அமைப்பு சொன்னது.

அமெரிக்கா, பிரிட்டன். பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் புதிய தொற்றுகள் வெகுவாக உயர்ந்தன.