கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடக்கநிலை 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முதல் தடுப்பூசியை கடந்த இரு நாட்களில் போட்டுக்கொண்டுள்ளனர்.
இதைத் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்த கல்வியமைச்சர் சான் சுன் சிங், "பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட காலத்தில் நேரம் பதிவு செய்ய விரும்புவதை நான் அறிவேன்.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள திங்கள்கிழமையில் இருந்து வியாழக்கிழமைக்கு உட்பட்ட காலத்திலும் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் விரைவாகவே ஊசிபோடும் நேரத்தைப் பெறலாம் என்று கூறியுள்ளார்.
"பள்ளி நேரங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டாலோ, தடுப்பூசி காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ மாணவர்களுக்கு மருத்துவ விடுப்பு கிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன். தேவையானால், விட்டுப்போன பாடங்களை அவர்கள் கற்றுக்கொள்ள பள்ளிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்," என்றும் அவர் உறுதியளித்தார்.
கல்வி அமைச்சின்கீழ் வராத பள்ளிகளில் பயிலும் ஒன்பதிலிருந்து பதினொரு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பதிவுகள் தேசியப் பதிவுமுறையின்கீழ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின்கீழ் வரும் பள்ளிகளில், மதரசா பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துகொள்ளும்படி சென்ற புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.
வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதியிலிருந்து தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களுக்கான பதிவுகள் தொடங்கும். ஜனவரி 6லிருந்து 5 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தை 5 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுப் பிள்ளைகளுக்கும் நீட்டிப்பதன் மூலம் ஏறக்குறைய 300,000 பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது. இதுவே தடுப்பூசி போடப்படாத ஆகப்பெரிய குழுமம் என்று கூறப்படுகிறது.
"மருத்துவ ரீதியாக நம் பிள்கைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தால், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவோம். இது அவர்களையும் நமது சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்," என்று திரு சான் சொன்னார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்டு வரும் இந்த ஓராண்டு காலத்தில், மொத்த மக்கள்தொகையில் 87 விழுக்காட்டினர் கொவிட்-19 கிருமிக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 38 விழுக்காட்டினர் பூஸ்டர் ஊசி போட்டுள்ளனர். ஆக்ஸ்ஃபர்டு ஆய்வுத் திட்டமான 'அவர் வேர்ல்டின்' தரவுகளின்படி, சிங்கப்பூர் தற்போது உலக தடுப்பூசி விகிதத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

