ஓமிக்ரான் ஆபத்து தொடர்ந்து நீடிக்கிறது

ஓமிக்ரான் ஆபத்து தொடர்ந்து நீடிக்கிறது

2 mins read

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஓமிக்­ரான் வகைக் கிரு­மி­யா­வில் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து தொடர்ந்து நீடிக்­கிறது. அத­னால் உலக சுகா­தா­ரக் கட்­ட­மைப்­புக்கு நெருக்­கடி ஏற்­ப­ட­லாம் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

உல­க­ளா­விய கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை கடந்த வாரத்­தில் 11 விழுக்­காடு கூடி­யது.

பல நாடு­களில் கிரு­மித்­தொற்று வெகு­வி­ரைவா­கக் கூடி­ய­தற்கு ஓமிக்­ரான் கார­ணம் என்­றும் சில நாடு­களில் டெல்டா தொற்­றுப் பர­வ­லை­விட ஓமிக்­ரான் தொற்­றுப் பர­வல் அதி­க­மாக உள்­ளது என்­றும் உலக அமைப்பு கூறி­யது.

ஓமிக்­ரானுக்கு இரண்டு மூன்று நாள்­களில் இரட்­டிப்­பா­கும் ஆற்­றல் உள்­ள­தால் அது டெல்­டா­வை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்­ப­தைச் சான்­று­கள் காட்­டு­கின்­றன.

உட­லின் தடுப்­பாற்­ற­லால் ஓமிக்­ரானை அதி­கம் கண்­ட­றிய முடி­வ­தில்லை. மேலும் அது அதி­கம் பரவக்­கூ­டி­யது. இத­னாால் தொற்றுப் பர­வல் விகி­தம் வெகு­வாக உயர்ந்­தி­ருக்­கக்­கூ­டும் என்றது அமைப்பு.

எனினும், ஓமிக்­ரான் கண்­ட­றி­யப்­பட்ட தென்­னாப்­பி­ரிக்­கா­வில் ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 29 விழுக்­காடு குறைந்­துள்­ளது என்­ப­தை­யும் அது குறிப்­பிட்­டது.

டெல்டா வகை­யை­விட ஓமிக்­ரான் தொற்­றி­ய­வர்­கள் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­படும் அபா­யம் குறைவு என்று பிரிட்­டன், தென் ஆப்­பி­ரிக்கா, டென்­மார்க் ஆகி­ய­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் தக­வல்­கள் கோடி­காட்­டு­கின்­றன.

உலக அள­வில் கடந்த வாரம் கிட்­டத்­தட்ட 5 மில்­லி­யன் புதிய கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. ஏறக்­கு­றைய 44,000 பேர் ­தொற்­றால் மாண்­ட­னர். இது முந்­தைய வாரத்­தைக் காட்­டி­லும் 4% குறைவு என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன். பிரான்ஸ், இத்­தாலி போன்ற நாடு­களில் புதிய தொற்­று­கள் வெகு­வாக உயர்ந்­தன.

பிரான்­சில் ஒரே நாளில் 179,807 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. ஜன­வரி ஆரம்­பத்­தில் நாளுக்கு 250,000 தொற்­றுச் சம்­ப­வங்­கள் வரை நிக­ழ­லாம் என்று அந்நாட்டு சுகா­தார அமைச்­சர் ஓலி­வியே வேரன் கூறி­னார்.

பிரிட்­ட­னில் நேற்று முன்தினம் இது­வரை இல்­லாத அள­வுக்கு 129,471 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. ஆனால் பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த புதிய நட­வ­டிக்­கை­க­ளைக் கொண்­டு­வ­ரப் போவ­தில்லை என்று கூறி­யுள்­ளார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் கிடுகிடுவென பரவும் தொற்று

அமெ­ரிக்­கா­வில் புதிய தொற்­று­களில் ஓமிக்­ரான் தொற்று 58.6 விழுக்­காட்­டுப் பங்கு வகிப்­ப­தாக அமெ­ரிக்க தொற்­று­நோய் கட்­டுப்­பாட்­டுத் தடுப்பு நிலை­யம் கூறி­யது. மருத்­துவமனை­யில் சேர்க்­கப்­படும் சிறார்­க­ளின் எண்­ணிக்கை கூடியுள்­ளது, பெரி­ய­வர்­கள் எண்­ணிக்கை இரட்­டிப்­பா­கி­யுள்­ளது. எனி­னும் ஓமிக்­ரான் குழந்­தை­க­ளுக்கு மிக­வும் அச்­சு­றுத்­த­லா­னது என்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் இல்லை என நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை நேற்று 18,300ஐ நெருங்கி புதிய உச்­சத்­தைத் தொட்­டது. நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் மட்­டும் தொற்று எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட இரட்­டிப்­பாகி, 11,201 ஆனது. கிருமி தொற்­றி­ய­வர்­க­ளைப் பரா­ம­ரிக்­க­வும் கிரு­மிப் பரி­சோ­த­னை­களை நடத்­த­வும் ஆஸ்­தி­ரே­லிய மருத்­து­வ­ம­னை­கள் திணறி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், மருத்­து­வக் கட்­ட­மைப்பு மீதான சுமை­யைக் குறைக்க, கொவிட்-19 விதி­மு­றை­களில் சில மாற்­றங்­களை ஆஸ்­தி­ரே­லியா அறி­வித்­துள்­ளது.