அடுத்த மூன்று மாதங்களுக்கான மின்சார, எரிவாயுக் கட்டணம் உயர்கிறது

அடுத்த மூன்று மாதங்களுக்கான மின்சார, எரிவாயுக் கட்டணம் உயர்கிறது

2 mins read
97b29a6f-179d-47f2-bb89-f44aaa7a2cc2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் 5.6% உயர்த்தப்படுகிறது.

இப்போது, பொருள், சேவை வரிக்குமுன் மணிக்கு ஒரு கிலோவாட் (kWh) மின்சாரத்திற்கு 24.11 காசு வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதிவரை அக்கட்டணம் 25.44 காசாக உயரும் என்று எஸ்பி குழுமம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, சராசரியாக ஒரு மாதத்திற்கு மணிக்கு 354 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நாலறை வீட்டுக் குடும்பங்கள், கூடுதலாக $4.70 மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

அதிகரித்துவரும் எரிபொருள் விலையே மின்கட்டண உயர்விற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

உலக அளவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரின் எரிசக்தியில் கிட்டத்தட்ட 95% இயற்கை எரிவாயு மூலம் பெறப்படுகிறது. அது அண்டை நாடுகளில் இருந்து குழாய் வழியாக அல்லது உலக நாடுகளில் இருந்து திரவ நிலையில் இறக்குமதி செய்யப்படுகிறது.

நான்கு கூறுகளின் அடிப்படையில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

எரிபொருள் செலவு அதில் கிட்டத்தட்ட பாதிப் பங்கை வகிக்கிறது. மின்சார உற்பத்தி ஆலைகளின் பராமரிப்பு, மின்சார அளவீடு, மின்தொகுப்பு வழியாக மின்சாரத்தை அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கான செலவுகளை இதர பங்கு உள்ளடக்குகிறது.

மின்சாரக் கட்டணம் காலாண்டிற்கு ஒருமுறை எஸ்பி குழுமத்தால் மறுஆய்வு செய்யப்பட்டு, எரிசக்திச் சந்தை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்படும்.

"கடந்த சில மாதங்களாக, மீட்சியடைந்துவரும் பொருளியல் நடவடிக்கைகள், கடுமையான வானிலை நிகழ்வுகள், எரிவாயு உற்பத்தி நிறுத்திவைப்பு போன்ற நிகழ்வுகளால் உலக அளவில் எரிசக்திச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு விலையேற்றம் கண்டுள்ளது. இவையெல்லாம், உலகின் பல நாடுகளிலும் மின்சாரக் கட்டணம் உயரக் காரணமாகிவிட்டன," என்று எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 2022 முதல் காலாண்டில் வீடுகளுக்கான சமையல் எரிவாயுக் கட்டணமும் 6.1% உயர்த்தப்படும் என்று சிட்டி கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போதைக்கு மணிக்கு ஒரு கிலோவாட்டுக்கு 19.04 காசாக இருக்கும் சமையல் எரிவாயுக் கட்டணம், அடுத்த காலாண்டில் 1.17 காசு கூடி, 20.21 காசாக அதிகரிக்கும். பொருள், சேவை வரியையும் சேர்த்தால் அது 21.62 காசாக உயரும்.

முந்திய காலாண்டைக் காட்டிலும், எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளதும் எரிபொருள் சாராச் செலவுகள் கூடியிருப்பதுமே இந்தக் கட்டண உயர்விற்குக் காரணம் என்று சிட்டி கேஸ் தெரிவித்துள்ளது.