மின்சார, எரிவாயுக் கட்டணம் கூடுகிறது

மின்சார, எரிவாயுக் கட்டணம் கூடுகிறது

2 mins read

சிங்­கப்­பூ­ரில் அடுத்த மூன்று மாதங்­க­ளுக்­கான மின்­சா­ரக் கட்­ட­ணம் 5.6% உயர்த்­தப்­ப­டு­கிறது.

இப்­போது, பொருள், சேவை வரிக்­கு­முன் ஒரு கிலோ­வாட் (kWh) மின்­சா­ரத்­திற்கு 24.11 காசு வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், வரும் ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து மார்ச் 31ஆம் தேதி­வரை அக்­கட்­ட­ணம் 25.44 காசாக உய­ரும் என்று எஸ்பி குழு­மம் அறி­வித்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து, சரா­ச­ரி­யாக ஒரு மாதத்­திற்கு 354 கிலோ­வாட் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும் நாலறை வீட்­டுக் குடும்­பங்­க­ளின் மின்­கட்­ட­ணம் 4.70 வெள்ளி அதி­க­மா­கும்.

அதி­க­ரித்­து­வ­ரும் எரி­பொ­ருள் விலையே மின்­கட்­டண உயர்­விற்குக் கார­ண­மா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

உலக அள­வில் நில­வும் எரி­பொருள் பற்­றாக்­கு­றை­யால் கடந்த சில மாதங்­க­ளாக மின்­சா­ரக் கட்­ட­ணம் அதி­க­ரித்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் எரி­சக்­தி­யில் கிட்­டத்­தட்ட 95% இயற்கை எரி­வாயு மூலம் பெறப்­ப­டு­கிறது. அண்டை நாடு­களில் இருந்து குழாய் வழி­யாக அல்­லது உலக நாடு­களில் இருந்து திரவ நிலை­யில் இயற்கை எரிவாயு இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிறது.

மின்­சா­ரக் கட்­ட­ணம் காலாண்­டிற்கு ஒரு­முறை எஸ்பி குழு­மத்­தால் மறு­ஆய்வு செய்­யப்­பட்டு, எரி­சக்­திச் சந்தை ஆணை­யத்­தி­டம் இருந்து ஒப்­பு­தல் பெறப்­படும்.

"மீட்­சி­ய­டைந்­து­வ­ரும் பொரு­ளியல் நட­வ­டிக்­கை­கள், கடு­மை­யான வானிலை நிகழ்­வு­கள், எரி­வாயு உற்­பத்தி நிறுத்­தி­வைப்பு போன்ற நிகழ்வு­க­ளால் கடந்த சில மாதங்­களாக உலக அள­வில் எரி­சக்­திச் சந்­தை­யில் குறிப்­பி­டத்­தக்க அளவு விலை­யேற்­றம் காணப்­ப­டு­கிறது. இவை­யெல்­லாம், உல­கின் பல நாடு­களி­லும் மின்கட்­ட­ணம் உய­ரக் கார­ண­மா­கி­விட்­டன," என்று எஸ்பி குழு­மம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், உயர்த்­தப்­பட்ட மின்­கட்­ட­ணம் குறைந்­தது ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­க­லாம் என்று எரி­சக்­திப் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மா­கப் பல நாடு­களில் மீண்­டும் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்டு வரு­வ­தால் இந்த விலை­யேற்­றம் நீடிக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூத்த ஆய்­வா­ளர் டாக்­டர் டேவிட் பிராட்ஸ்­டாக் கூறி­னார்.

2023ஆம் ஆண்­டு­வரை கச்சா எண்­ணெய் விலை ஏறு­மு­கத்­தில் இருக்­க­லாம் என்று ஓசி­பிசி வங்­கி­யின் பொரு­ளி­யல் வல்­லு­ந­ரான திரு ஹோவி லீ கூறி­யி­ருக்­கி­றார்.

இதற்­கி­டையே, 2022 முதல் காலாண்­டில் வீடு­க­ளுக்­கான சமை­யல் எரி­வா­யுக் கட்­ட­ண­மும் 6.1% உயர்த்­தப்­படும் என்று சிட்டி கேஸ் நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இப்­போ­தைக்கு ஒரு கிலோ­வாட்­டுக்கு 19.04 காசாக இருக்­கும் சமை­யல் எரி­வா­யுக் கட்­ட­ணம், அடுத்த காலாண்­டில் 1.17 காசு கூடி, 20.21 காசாக அதி­க­ரிக்­கும். பொருள், சேவை வரி­யை­யும் சேர்த்­தால் அது 21.62 காசாக உய­ரும்.

முந்­திய காலாண்­டைக் காட்­டி­லும், எரி­பொ­ருள் விலை­யேற்­றம் கண்­டுள்­ள­தும் எரி­பொ­ருள் சாராச் செல­வு­கள் கூடி­யி­ருப்­ப­துமே இந்­தக் கட்­டண உயர்­விற்­குக் கார­ணம் என்று சிட்டி கேஸ் தெரி­வித்­து உள்ளது.