டெல்டா, ஓமிக்ரான் என இரட்டை அச்சுறுத்தலால் கவலை
உருமாறிய கொவிட்-19 கிருமிகளான டெல்டாவும் ஓமிக்ரானும் தொற்றுப் பாதிப்பை 'சுனாமி' போன்று பேரளவிற்கு இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார்.
கவலைக்குரிய திரிபுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள டெல்டா மற்றும் ஓமிக்ரானை 'இரட்டை அச்சுறுத்தல்களாக' உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை வர்ணித்துள்ளது. இவ்விரு திரிபுகளும் தொற்றுப் பாதிப்புகளைப் புதிய உச்சத்துக்கு இட்டுச்செல்கின்றன. இதனால், கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
"டெல்டா பரவும் அதே நேரத்தில், வேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரானும் பரவி வருவதால், 'சுனாமி' போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது," என்று திரு டெட்ரோஸ், செய்தியாளர்களிடம் கூறினார்.
"இது, ஏற்கெனவே சோர்வடைந்துள்ள சுகாதார ஊழியர்களுக்குத் தொடர்ந்து அளவிற்கு அதிகமான நெருக்குதலை அளித்து, சுகாதாரக் கட்டமைப்பு கவிழ்ந்துவிடும் நிலைக்குத் தள்ளிவிடும்," என்றார் அவர்.
கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் மட்டுமின்றி, பெரும் எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாவதால் சுகாதாரக் கட்டமைப்புக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு கொவிட்-19க்கு எதிரான போரை நினைவுபடுத்திய உலக சுகாதார நிறுவனம், பெருந்தொற்றின் மிகக் கடுமையான நிலை அடுத்த ஆண்டு ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆனாலும், தடுப்பூசி விநியோகத்தில் பேணப்படும் சரிவிகிதத்தைப் பொறுத்தே அது அமையும் என்று அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், 2022 நடுப்பகுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட உறுதிகொள்ளுமாறு டாக்டர் டெட்ரோஸ் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

