2010ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகுந்த ஏற்றம் கண்ட சிங்கப்பூர் பொருளியல்
சிங்கப்பூர் பொருளியல் கடந்த பத்துஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சென்ற ஆண்டில் அதிவேக வளர்ச்சி கண்டது.
கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் பொருளியல் 7.2% வளர்ச்சி கண்டது. 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே ஆக அதிக வளர்ச்சி.
இந்த வளர்ச்சி முந்திய மதிப்பீடுகளைக் காட்டிலும் அதிகம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது.
பொருளியல் வளர்ச்சி கிட்டத்தட்ட 7 விழுக்காடாக இருக்கும் என்று சென்ற ஆண்டு நவம்பர் மாதமும் அதற்குமுன் பொருளியல் 6% முதல் 7% வரை வளரும் என்றும் அமைச்சு கணித்திருந்தது.
முன்னதாக, 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பொருளியல் 5.4% சுருங்கியது.
இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 3% முதல் 5% வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஆண்டு அடிப்படையில் சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் பொருளியல் 5.9% ஏற்றம் கண்டது. அதற்கு முந்திய காலாண்டில் இவ்வளர்ச்சி விகிதம் 7.1 விழுக்காடாக இருந்தது.
முன்னதாக, பொருளியல் வளர்ச்சி 2021 நான்காம் காலாண்டில் 5.1 விழுக்காடாகவும் ஒட்டுமொத்தமாக 2021ல் 7.1 விழுக்காடாகவும் இருக்கும் என்று புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
காலாண்டு அடிப்படையில் பார்க்கையில், 2021 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இறுதிக் காலாண்டில் பொருளியல் 2.6% வளர்ச்சி கண்டது. அதற்கு முந்திய காலாண்டில் பொருளியல் 1.2% வளர்ச்சி கண்டிருந்தது.
2021 கடைசிக் காலாண்டில் உற்பத்தித் துறையின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், அது 14% வளர்ச்சி கண்டது. மூன்றாம் காலாண்டில் இவ்வளர்ச்சி விகிதம் 7.9 விழுக்காடாகப் பதிவானது.
பகுதி மின்கடத்திகளுக்கான தேவை உலக அளவில் அதிகமாக இருந்து வருவதால் மின்னணு மற்றும் துல்லியப் பொறியியல் துறைகள் வலுவான ஏற்றம் கண்டன.
ஒட்டுமொத்த ஆண்டையும் பார்க்கும்போது, உற்பத்தித் துறை 12.8% ஏற்றம் கண்டது. முந்திய 2020ஆம் ஆண்டில் அத்துறை 7.3% வளர்ச்சி கண்டிருந்தது.
ஆண்டு அடிப்படையில், 2021 இறுதிக் காலாண்டில் கட்டுமானத் துறை 2% வளர்ச்சி கண்டது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அத்துறை 66.3% ஏற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
சேவைத் துறையைப் பொறுத்தமட்டில், 2021 நான்காம் காலாண்டில் 4.6% விரிவடைந்தது. ஒட்டுமொத்தமாக, 2021ஆம் ஆண்டில் அத்துறை 5.2% வளர்ச்சியடைந்தது.
உலக அளவில் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி போட்டுள்ளோருக்கான பயணப் பாதை (விடிஎல்) பயணச்சீட்டு விற்பனையை இம்மாதம் 20ஆம் தேதிவரை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது.
இருப்பினும், 2021 இறுதிக் காலாண்டுப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, பொருளியல் வளர்ச்சி வேகமடைந்துள்ளதைக் காட்டுவதாக உள்ளது என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

