மழை விட்டு விட்டுப் பெய்து பயமுறுத்துவதால் 5,400க்கும் மேற்பட்ட ஜோகூர் மாநில குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
திங்கட்கிழமை வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,737 ஆக இருந்த நிலையில் ேநற்று மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். நேற்றைய நண்பகல் நிலவரப்படி 5,479 பேர் அவ்வாறு இடம்
பெயர்ந்துவிட்டதாக ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக்குழுவின் தலைவர் ஆர் வித்ய நாதன் தெரிவித்தார்.
மாநிலத்தில் மழையால் மோசமான பாதிப்பை எதிர்நோக்கும் ஏழு மாட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் குடியிருப்புவாசிகள். இவற்றில் சிகாமட் மாவட்டம்தான் அதிக பாதிப்புக்கு உள்ளானது.
பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டத்தில் இருந்து மட்டும் 4,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்
களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மாவட்டத்தில் ஓடும் ஐந்து ஆறுகளில் நான்கின் நீர்மட்டம் அபாய அளவை எட்டிவிட்டதாக மாநில நீர்ப்பாசன, வடிகால் துறை நேற்று தெரிவித்தது.
அபாயத்தில் சிக்கிவிடாமல் மீட்கப்பட்டவர்களுக்காக 79 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர் களுக்கு உணவு அளிக்கப்படும் என்றும் திரு வித்யநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொவிட்-19 பாதுகாப்பு நடை
முறைகள் இந்த முகாம்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் முகாம்களுக்குள் நுழையும் முன்னர் குடியிருப்புவாசிகளின் உடல் வெப்பநிலையும் நோய் அறிகுறிகளும் சோதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேசிய வானிலை ஆய்வுத் துறை நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் ஜோகூர் மாநிலத்தின் தெற்கு வட்டாரங்
களுக்கான மழை, வெள்ள எச்சரிக்கையை விடுத்தது.
ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, பொந்தியான் மற்றும் கூலாய் போன்ற பகுதிகள் கடுமையான மழையை எதிர்நோக்கலாம் என்று அந்த எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.