தங்களது கடப்பிதழ்களைப் புதுப்பிக்கும் அல்லது புதிய கடப்பிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் தொடர்ந்து சரிந்தது.
அதன்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சிங்கப்பூர் கடப்பிதழ்களின் எண்ணிக்கை, 15 ஆண்டுகளில் ஆகக் குறைவு.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) கடந்த ஆண்டு 281,918 கடப்பிதழ்களை வழங்கியது. நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுமே, புதிதாக வழங்கப்பட்ட கடப்பிதழ்களின் எண்ணிக்கை குறைய காரணம்.
2006ல் சிங்கப்பூரர்களுக்கு 353,562 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒருவர் ஏற்கெனவே வைத்திருக்கும் கடப்பிதழ் காலாவதியாகிவிட்டாலோ காலாவதியாக இருந்தாலோ புதிய கடப்பிதழ் வழங்கப்படுகிறது. கடப்பிதழ் வைத்திருக்காத ஒருவர் அதற்கு விண்ணப்பிக்கும்போதும் அது வழங்கப்படுகிறது.
குறிப்பிடும்படியாக, கடந்த ஆண்டின் இறுதியில், கடப்பிதழ்களுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிமுதல், 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆனால், 16 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டுமே 10 ஆண்டுகால கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு ஐந்து ஆண்டு கடப்பிதழ் மட்டுமே வழங்கப்படும். அத்தகையோர் வளர வளர, அவர்களது முக அடையாளம் மாறுவதே அதற்குக் காரணம் என்று ஆணையம் விளக்கியது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடப்பிதழ்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 103,968 கடப்பிதழ்கள் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வழங்கப்பட்டன.
2019ல் 711,617 சிங்கப்பூர் கடப்பிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், 2020ல் அந்த எண்ணிக்கை 320,709ஆக சரிந்தது. அந்த ஆண்டு உலகம் முழுவதும் கொவிட்-19 பரவல் தீவிரமடைந்ததால், உலக நாடுகள் தங்களது எல்லைகளை மூடத் தொடங்கின.

