ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை உலகில் தினமும் சராசரியாக 2.1 மில்லியன் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக ஏஎப்ஃபி செய்தி நிறுவனம் கணக்கிட்டுக் கூறியுள்ளது.
ஒப்புநோக்க, டிசம்பர் 23 முதல் 29 வரை தினமும் சராசரியாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன.
மறு வாரத்தில், புதிய அன்றாடத் தொற்றுச் சம்பவங்கள் 2,106,118 எனும் சராசரிய எண்ணிக்கையில் உள்ளன.
ஓமிக்ரான் வகைக் கிருமி நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட பின்னர் உலக அளவிலான புதிய தொற்றுச் சம்பவங்கள் 270 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஏஎப்ஃபி கூறியது.
மேலும், ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை கொவிட்-19 தொடர்பான 6,237 மரணங்கள் நிகழ்ந்தன.
2020 அக்டோபருக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகியவற்றில்தான் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது.
இந்த வாரம் உலக அளவில் பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களில் 49 விழுக்காடு, ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தன.
அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளிலும் சுமார் 33 விழுக்காட்டு புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன.

