இந்தியாவில் நேற்று புதிதாக 247,417 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை, நேற்று முன்தினம் பதிவானதைவிட 27.1 விழுக்காடு அதிகம்.
இதனைத் தொடர்ந்து ஆகக் கடைசி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை குறைந்தது 3.63 மில்லியன் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 5,488 பேருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது.
கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் மேலும் 481 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் இதுவரை குறைந்தது 484,859 கொவிட்-19 நோயாளிகள் மடிந்துவிட்டனர்.
கேரள மாநிலத்தில்தான் ஆக அதிகமானோர் மாண்டனர். அம்மாநிலத்தில் இதுவரை 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் அதிகமானோர் மாண்டனர்.
நாடு முழுவதும் கிருமித்தொற்று ஏற்பட்ட குறைந்தது 3.47 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 84,825 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்தனர்.
இந்தியாவில் இதுவரை கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 95.59 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் குறைந்தது 1.88 மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதோடு, 24 மணிநேரத்தில் சுமார் 7.6 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

