கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிந்திய உலகில் போட்டித்தன்மை மிகுந்த சூழலுக்குப் பொருந்தும் வகையில் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான் சிங்கப்பூர் போன்ற ஒரு நகரம் மேற்கொள்ளவேண்டிய பெரிய முயற்சி என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். கலந்துரையாடல் ஒன்றில் நகரங்களைப் பற்றிப் பேசும்போது திரு ஓங் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாகவும் நகரமாகவும் இருக்கும் 730 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிங்கப்பூரில், பரபரப்பான பொருளியல் மையம், அதற்கு அப்பால் இருக்கும் அமைதியான குடியிருப்புப் பேட்டைகள் என்று வெவ்வேறு பகுதிகள் கிடையாது.
அதனால் சிறிய தீவான சிங்கப்பூரின் ஐந்து மில்லியன் மக்களுக்கு இருக்கும் மாறுபட்ட ஆசைகளைப் பூர்த்திசெய்ய நாட்டை ஆக்ககரமான முறையில் வழிநடத்துவதும் சரியான அரசியல் சூழலை உருவாக்குவதும் முக்கியம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
"முடிவே இல்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடுவது, தீர்வுகளே காணாமல் இருப்பது ஆகியவற்றுக்கு வழிவகுப்பதற்குப் பதிலாக அரசியல் முறை ஆக்ககரமாக இருப்பதுடன் வேறுபாடுகளைச் சரிசெய்யவேண்டும். அதிருப்தி தரக்கூடிய முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை உருவானாலும் நாட்டை முன்னுக்குக் கொண்டுவர வகைசெய்வதே அரசியல் முறையின் குறிக்கோளாக இருக்கவேண்டும்," என்று அவர் சுட்டினார்.
"இது குறிப்பாக சிங்கப்பூருக்கு முக்கியம். போதுமான வளங்களும் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பும் நம்மிடையே இல்லாவிட்டாலும், துரிதமாக இயங்குவது, குறிக்கோளுடன் செயலில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் அந்த குறைபாட்டை ஈடுகட்டலாம்," என்று திரு ஓங் சொன்னார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைப்போலவே சிங்கப்பூரும் ஒரு நவீன மாநகரமாக விளங்குவதோடு உலகுடன் தொடர்பில் இருக்கவேண்டிய ஓர் உலகளாவிய பொருளியல் மையமாகவும் இருக்கிறது என்று திரு ஓங் கூறினார்.
சிங்கப்பூரின் ஆட்சி முறை
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பதைப் போல் சிங்கப்பூரில் ஆட்சியைப் பிடிக்க இரண்டு கட்சிகள் போட்டியிடும் சூழல் உருவாக அதிக வாய்ப்பில்லை என்றும் திரு ஓங் குறிப்பிட்டார். ஓர் அரசியல் கட்சி மீது சிங்கப்பூரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் அதை நகரம் முழுவதும் உணரமுடியும். அதேபோல், அரசாங்கம் சிறப்பாகச் செய்து மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த உணர்வும் "தீவு முழுவதும் பரவும்," என்று திரு ஓங் கூறினார்.
மக்கள் செயல் கட்சி தற்போது ஆளும் கட்சியாக இருக்கலாம். அதற்காக அது மெத்தனமாக இருந்துவிடாமல் மக்கள் அதன் மீது வைஙததுள்ள நம்பிக்கையை என்றும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
"அதனால், ஆளும் கட்சியாக இருக்கும்போது நமது முன்னோர்களின் நல்ல வேலை தொடர்வதை நாங்கள் உறுதிப்படுத்தவேண்டும், பொறுப்புள்ள அரசாங்கமாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்," என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் கொள்கை ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்த 'சிங்கப்பூர் கண்ணோட்டம் 2022' கலந்துரையாடலில் திரு ஓங் பேசினார்.

