பல சவால்களைக் கடக்க நேரிட்டாலும் சிங்கப்பூரின் தமிழ் முஸ்லிம்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மட்டும் உழைக்காமல் ஒன்றிணைந்து சமூகத்தின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளனர் என்றும் கல்வி, சமூக சேவை மூலம் அடுத்த தலைமுறைக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர் என்றும் கூறினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
மூன்று தலைமுறைகளுக்கும் அதற்கு மேலாகவும் சிங்கப்பூரை தாய்நாடாகக் கருதி வேரூன்றி இருக்கும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள், மன உறுதி, மீள்திறன், சேவை உணர்வை பறைசாற்று கின்றனர் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (சங்கம்) அமைப்பின் 80ஆம் ஆண்டு சின்னம் அறிமுக விழா மற்றும் 'சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்கள்' எனும் ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சான், தமிழ் முஸ்லிம்களின் முக்கிய பங்களிப்பைப் பட்டியலிட்டு புகழாரம் சூட்டினார்.
சங்கத்தின் துணைத் தலை வரும் ஓய்வுபெற்ற தமிழாசிரியருமான திரு மு.அ. மசூது, சங்கத்தின் தலைவர் திரு ராஜா முஹம்மது ஆகிய இருவரும் இணைந்து இந்நூலை எழுதியுள்ளனர்.
சிங்கப்பூரின் பல இன, பல சமய நல்லிணக்கத்திற்குத் தமிழ் முஸ்லிம்கள் பெரும் பங்காற்றி உள்ளதை குறிப்பிட்டு பேசிய அமைச்சர், நூலில் இருந்து சில உதாரணங்களை சுட்டிக் காட்டினார்.
1946ஆம் ஆண்டில் உமறுப் புலவர் தமிழ் பள்ளியைத் தொடங்க தமிழ் முஸ்லிம்கள் தங்களின் குறைந்த வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கிய வரலாற்றையும் அவர் மெச்சினார்.
நூலுக்கு முன்னுரை வழங்கி யுள்ள அதிபர் ஹலிமா யாக்கோப், கடின உழைப்பு, மீள்திறன், விடா முயற்சியை பிரதிபலிக்கும் வர லாற்றுக் கதைகளை ஒன்று சேர்ப்பதே நமது மரபுடைமை என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை கெங் லீ சாலையிலுள்ள சுவி ஹுவெ லிம் மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட கிட்டத்தட்ட 230 பேர் கலந்துகொண்டனர்.
மேலும் பலர் ஃபேஸ்புக் தளம் வழியாக நேரலையில் இணைந்தனர்.
"ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சிறுபான்மை சமூகம் உட்பட அனைத்து சமூகமும் ஆற்றியுள்ள பங்களிப்பைப் பதிவு செய்வதன் மூலமே ஒரு நாட்டின் வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியும்.
"சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் அதன் தேர்ச்சிக்கும் சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்கள் பெருமளவில் பங்களித்துள்ளனர்.
"அந்த வரலாறு தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தினரும் அறிய வேண்டும்," என்று நூலின் இணை ஆசிரியரான திரு மசூது தெரிவித்தார்.
இளையர்களை ஈர்ப்பதில் கூர்ந்து கவனம் செலுத்திவரும் சங்கம், அடுத்த தலைமுறைக்கும் தயாராகி வருவதாகக் கூறினார் சங்கத்தின் தலைவர் திரு ராஜா முஹம்மது.
மின்னிலக்கத் தளத்திலும் மெய்நிகர் உலகத்திலும் இச்சமூகம் துடிப்புடன் செயல்படும் என்ற அவர், முதல் படியாக 'மெடாவெர்ஸ்' எனும் மெய்நிகர் உலகில் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் இச்சமூகத்தின் பல சமய நல்லிணக்க கலாசார மையத்தை உருவாக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
நூல் விற்பனையில் கிடைக்கும் பணம் சமூக அறநிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் சங்கத்தினரையும் எழுத்தாளர் களையும் அணுகி நூலைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சங்கத்தின் முன்னாள் தலைவரான திரு நசீர் கனி தெரிவித்தார்.

