சிங்கப்பூரில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது 7 விழுக்காடாக இருக்கும் ஜிஎஸ்டி 9 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று 2018ஆம் ஆண்டில் முதன்முதலில் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்தது. இதனையடுத்து, இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரக்கூடும் எனச் சொல்லப்பட்டது.
இருப்பினும், இப்போது நிலவும் உலகளாவிய பணவீக்க நெருக்கடியாலும் ஏற்ற இறக்கமாக இருக்கும் பொருளியல் மீட்சியாலும், 2023 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்துதான் ஜிஎஸ்டி உயர்வு நடைமுறைக்கு வரக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்கள் சிலர் கணித்துள்ளனர்.
அப்படி ஜிஎஸ்டி உயர்வை ஆறு மாதங்களுக்கு தள்ளிப்போடுவது, போதிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள தொழில்துறையினருக்கும் பயனீட்டாளர்களுக்கும் சற்றுக் கூடுதல் கால அவகாசம் அளிக்கும் என்று ஓசிபிசி வங்கியின் கருவூல ஆய்வு, உத்திப் பிரிவின் தலைவர் செலினா லிங் கூறினார்.
2007ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி 5 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அதுகுறித்த அறிவிப்பு அவ்வாண்டு பிப்ரவரியில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது வெளியானது. அதன்பின் ஐந்து மாதங்கள் கழித்து, அதாவது 2007 ஜூலையில் அந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
வரி நிபுணர்கள் பலரும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே ஜிஎஸ்டி உயர்வு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கின்றனர்.
அண்மையில், ஜிஎஸ்டி உயர்வை நிரந்தரமாகத் தள்ளிவைக்க இயலாது என்றும் வேண்டுமானால் அது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தள்ளிப்போடலாம் என்றும் நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

