அபுதாபி: ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் இரு இந்தியர்கள் உட்பட மூவர் மரணம்

அபுதாபி: ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் இரு இந்தியர்கள் உட்பட மூவர் மரணம்

1 mins read
02dc0ae2-89ae-4d9b-8755-61aceb7ced0d
தலைநகர் அபுதாபியில் வெடிப்பு நிகழ்ந்த தொழிற்பேட்டை அருகில் எடுக்கப்பட்ட படம். படம்: ஏஎஃப்பி -

ஐக்கிய அரபு சிற்றரசுகள் தலைநகர் அபுதாபியில் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் எரிபொருள் கலன் திங்கட்கிழமை (ஜனவரி 17) வெடித்ததில் இரு இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு சிற்றரசுகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அபுதாபி அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் சிறிய அளவில் தீவிபத்தும் ஏற்பட்டது.

"வெடிப்பு மற்றும் தீ ஏற்பட்ட பகுதிகளில் சிறிய வானூர்திப் பாகங்கள் கண்டறியப்பட்டன. விபத்துக்கு அந்த ஆளில்லா வானூர்தியே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது," என்று WAM அரசாங்க செய்தி நிறுவனத்திடம் காவல்துறை கூறியது.

'அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி' வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதில் குறைந்தது அறுவர் காயமுற்றனர்.

முசஃபா எனும் அந்த தொழிற்பேட்டை, அதிபர் மாளிகையில் இருந்து ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்க, சவூதி அரேபியத் தூதரங்களில் இருந்து ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் தூரத்தில் அது உள்ளது.

இந்த ஆளில்லா வானூர்தித் தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுதி இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.