மேற்பார்வையின்கீழ் கொவிட்-19 சுயபரிசோதனை செய்வோருக்கான முன்னோட்டத் திட்டம்
மேற்பார்வையின்கீழ் சுயமாக கொவிட்-19 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொள்ள வேண்டியிருப்போர், இனி தனியார் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர் ஒருவர் காணொளி வழியாகக் கண்காணித்தபடி இருக்க, அதனைச் செய்துகொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தில் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
இப்படி, நிகழ்நேரத்தில் மெய்நிகர் மேற்பார்வையின்கீழ் 'ஏஆர்டி' சுயபரிசோதனை செய்துகொள்ளும் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் முன்னோட்டத் திட்டம் இடம்பெற்று வருவதாகச் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றுடன் வாழ சிங்கப்பூர் தயாராகி வருகிறது. இப்போது நேரடிப் பரிசோதனை மையங்களுக்குச் சென்று 'ஏஆர்டி' பரிசோதனை செய்துகொள்ள முடிகிறது.
இந்நிலையில், அவ்வப்போது சுயபரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக, அதற்கான தெரிவுகளை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
'எவ்விடத்திலும் மருத்துவர் (டாக்டர் எனிவேர்)' எனும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனம் இந்த முன்னோட்டத் திட்டத்தில் பங்குகொள்கிறது. இந்நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை தனது தொலைவழி 'ஏஆர்டி' சேவையை அறிமுகப்படுத்தியது.
தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வருவோர், தரையிறங்கியபின் 3வது. 7வது நாள்களில் மேற்பார்வையின்கீழ் சுயபரிசோதனை செய்துகொள்ள இத்திட்டம் வசதியாக இருக்கும்.
காணொளிக் கண்காணிப்பின்கீழ் சுயபரிசோதனை செய்ய விரும்பும் ஒருவர், முதலில் 'டாக்டர் எனிவேர்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இச்சேவைக்கு $12.84 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த 30 நிமிட மருத்துவ ஆலோசனையின்போது, சுயபரிசோதனை மேற்கொள்பவர் தமது காணொளிக் கருவியைச் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒருவர் சுயபரிசோதனையைத் தொடங்குமுன், 'ஏஆர்டி' பரிசோதனைத் தொகுப்பில் உள்ள அனைத்தும் திறக்கப்படாத நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவார். மூக்குத் துளையினுள் 2.5 சென்டிமீட்டர் அளவிற்கு பரிசோதனைக் குச்சியைச் செலுத்த வேண்டும்.

