தைப்பூசத்திருவிழா, கடந்தாண்டைப்போல இந்த ஆண்டும் கிருமிப்பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அமைதியாக நடந்தேறியது. தேங் ரோடு தெண்டாயுதபாணி கோவிலுக்கு திங்கள் நள்ளிரவு தொடங்கி நேற்று இரவு 10 மணி வரை வரத்தொடங்கிய பக்தர்கள் பால்குடம் ஏந்தி முருகக்கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால், அலகு குத்துதலும் வழக்கமாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து தொடங்கும் பாத ஊர்வலமும் இரண்டாவது ஆண்டாக அனுமதிக்கப்படவில்லை.
தைப்பூசத் திருநாளான நேற்றுக் காலை 8 மணி அளவில் ஸ்ரீதெண்டாயுதபாணி கோயிலுக்குச் சிறப்பு வருகை அளித்த துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் பால்குடம் ஏந்திச் சென்று கோயிலின் சந்நிதியில் சமர்ப்பித்தார்.
பிறகு அங்கிருந்த தொண்டூழியர்களையும் பொதுமக்களையும் சந்தித்து அவர் பேசினார்.
பின்னர் நேற்று பிற்பகலில் இதுபற்றி தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட திரு ஹெங், "இன்று காலை நான் பக்தர்களுடன் சேர்ந்து பால் குடம் ஏந்தினேன்.
"பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று நன்றி கூறி, ஆசீர்வாதம் பெற்று முருகப் பெருமானுக்கான தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். தேவையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே இவை நடத்தப்
படுகின்றன," என்று குறிப்பிட்டார்.
"நான் சந்தித்த சில பக்தர்கள், கிருமிப்பரவல் தொடர்பிலான தங்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்தனர். இத்திருவிழாவில் பல்வேறு இன, சமயத்தினர் உதவி செய்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இது நம் பல இன, கலாசார சமூகத்தின் பிரதிபலிப்பு," என்றும் திரு ஹெங் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, பால்குடம் எடுக்க சுமார் 7,500 பக்தர்கள் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதாக தெண்டாயுதபாணி கோயிலின் தலைவர் திரு சேக்கப்பன் சுவாமிநாதன், 68, கூறினார். நேற்று இரவு 9 மணியளவில் 7,100 பக்தர்கள் பால்குடம் எடுத்ததாகவும் சுமார் 5,100 பொது பக்தர்கள் தரிசனம் செய்த தாகவும் கோயில் நிர்வாகம் கூறியது.
"பால் குடம் எடுக்கும் பக்தர்களைத் தவிர்த்து மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றைய தைப்பூசத்தன்று கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அன்ன
தானத்திற்காக 15,000 உணவுப்பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார் திரு சுவாமிநாதன்.
கடந்த ஆண்டு சுமார் 5,000 பக்தர்கள் பால்குடம் ஏந்திச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றியதாகக் குறிப்பிட்ட அவர், அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் இவ்வாண்டு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.
கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தில் பால்குட பக்தர்களின் எண்ணிக்கை 12,000 ஆக இருந்தது. 2021 தைப்பூசத்திற்கும் இவ்வாண்டு தைப்பூசத்திற்கும் அதிக வேறுபாடு கள் இல்லை என்றாலும் தற்போது அதிகக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதாக திரு சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
"இம்முறை பக்தர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். தொண்டூழியர்கள் இங்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்படவேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் கோயில் வளாகத்தில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்," என்று அவர் பட்டியலிட்டார்.
பால்குட பக்தர்கள் ஐந்து பேர் கொண்டுள்ள குழுக்களாக செல்லலாம் என்று ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனை இறுதியில் மாற்றப்பட்டது. பால்குடம் சுமக்கும் ஒரு பக்தருக்குத் துணையாக ஒருவர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.

