உலகம் முழுவதுமான சுற்றுப்பயணிகளின் வரவு, 2024ம் ஆண்டு வரை நோய்த்தொற்றுக்கு முந்தைய அளவுக்குத் திரும்பாது என்று எதிர்பார்ப்பதாக உலகப் பயண அமைப்பு கூறியுள்ளது.
மட்ரீட் நகரைத் தளமாகக் கொண்டுள்ள உலகப் பயண அமைப்பு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைப்புகளில் ஒன்றாகும்.
2021இல் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2020ஐவிட 4 விழுக்காடு கூடியதாக அமைப்பு கூறியது.
அதிவேகமாகப் பரவும் ஓமிக்ரான் வகைக் கிருமி, 2022 தொடக்கத்தில் சுற்றுப்பணத் துறை மீட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று அமைப்பின் உலகப் பயணத் துறை குறியீடு கூறுகிறது.
"சுற்றுப்பயணி வரவின் மீட்சி மெதுவாகவே உள்ளது. மேலும், வெவ்வேறு வட்டாரங்களின்படி, எல்லைக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதங்கள், பயணிகள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியவற்றில் வேறுபாடுகளுக்கு ஏற்ப, பயணிகள் வரவு ஏற்ற இறக்கமாகவும் இருக்கிறது," என்று அமைப்பு கூறியது.
ஆனால் இவ்வாண்டின் பிற்பகுதியில் நிலைமை மேம்படும் என்று சுற்றுப்பயணத் துறை நிபுணர்கள் கருதுவதாக உலகப் பயண அமைப்பு கூறியது.
2021ஐக் காட்டிலும் அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 30 முதல் 78 விழுக்காடு உயரலாம் என்று அமைப்பு முன்னுரைத்தது.
ஆனால் 2024ல்தான் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை பழைய நிலைக்குத் திரும்பக்கூடும் என்று அது கூறியது.
நோய்ப்பரவலுக்கு முன்பு, சுற்றுப்பயணத் துறையின் மதிப்பு உலக அளவில் 3.5 அமெரிக்க ட்ரில்லியன் டாலராக (4.73 ட்ரில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) இருந்தது.
ஆனால் 2020இல் அது 1.6 ட்ரில்லியன் டாலருக்கும் (2.16 ட்ரில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) 2021இல் 1.9 ட்ரில்லியன் டாலருக்கும் (2.57 ட்ரில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) சரிந்தது என்று அமைப்பு தெரிவித்தது.

