கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியால் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏதும் பதிவாகவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி அறியப்பட்ட தகவல் என்று கூறப்பட்டது. ஆணையம் நேற்று தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்துத் தகவல் வெளியிட்டது.
இக்குறிப்பிட்ட வயதினரிடையே தோலில் தடிப்புகள், மயக்கம், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற கடுமையற்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதிமுதல் ஐந்திலிருந்து 11 வயது வரையிலான சிறார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் கடுமையற்ற சம்பவங்கள் மொத்தம் ஆறு நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டது.
போடப்பட்ட 20,327 தடுப்பூசிகளில் இது 0.03 விழுக்காட்டுக்குச் சமம்.
இதற்கிடையே 12 முதல் 18 வயதுப் பிரிவினரிடையே, தோலில் அரிப்பு மற்றும் தடிப்புகள், கண் இமைகள், முகம், உதடுகளில் வீக்கம், மூச்சுத் திணறல், நெஞ்சுப் படபடப்பு, நெஞ்சு இறுக்கமாகுதல், மயக்கம், காய்ச்சல் ஆகிய பக்கவிளைவுகளும் பொதுவாக ஏற்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
இந்த வயதுப் பிரிவு தொடர்பில் ஏற்பட்ட பக்கவிளைவுச் சம்பவங்கள் 1,170 என்று ஆணையம் தெரிவித்தது. இதுவரை 12 வயது முதல் 18 வயது வரையிலானோருக்குப் போடப்பட்ட 663,239 தடுப்பூசிகளில் பக்கவிளைவு ஏற்படுத்தியவை 0.18 விழுக்காடாகும்.
வெளிநாடுகளில் அறியப்பட்ட சம்பவங்களைப் போலவே, சிங்கப்பூரில் பதிவான பக்கவிளைவுச் சம்பவங்கள் சில நாள்களிலேயே சரியாகிவிட்டதாகக் கூறப்பட்டது. இவற்றில் 83 பக்கவிளைவுச் சம்பவங்கள் கடுமையானவை.
'ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி' மற்றும் 'மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ்' தடுப்பூசிகள், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மொத்தம் 11,490,023 முறை போடப்பட்டிருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது. இவற்றில் பக்கவிளைவு சார்ந்த சம்பவங்கள் என்று சந்தேகிக்கப்பட்டவை 14,729. கடுமையான பக்கவிளைவுச் சம்பவங்கள் என்று வகைப்படுத்தப்பட்டவை 747 ஆகும்.
ஃபைசர், மொடர்னா ஆகியவற்றை முதல், இரண்டாம் தடுப்பூசிகளாகப் போட்டுக்கொண்டவர்களுக்கும் கூடுதல் தடுப்பூசியாகவும் அவற்றையே போட்டுக்கொண்டவர்களுக்கும் ஒரே மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டன என்று ஆணையம் குறிப்பிட்டது.
கூடுதல் தடுப்பூசிகள் 2.2 மி. போடப்பட்டதில் 10 பேருக்கு இதய அழற்சி நோய் ஏற்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்ட பின்னர் 'அனஃபிலேக்சில்' எனும் உயிருக்கு ஆபத்ததான கடும் ஒவ்வாமை அரிதாக ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அத்தகைய கடும் ஒவ்வாமை நிலை, ஒவ்வொரு 100,000 தடுப்பூசிகளுக்கும் 0.88 எனும் விகிதத்தில் ஏற்பட்டது. இது வெளிநாடுகளில் காணப்பட்ட விகித்துக்கு ஒப்பானது.
பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசிகளைப் போடும்போது உயிருக்கு ஆபத்தான கடும் ஒவ்வாமை ஏற்பட்டதாக தற்போதைக்குத் தகவல் ஏதும் இல்லை.

