விரைவில் ஓமிக்ரான் அலை

விரைவில் ஓமிக்ரான் அலை

2 mins read

நாளொன்றுக்கு 15,000 பேர்வரை கிருமித்தொற்றுக்கு ஆளாகலாம் எனக் கணிப்பு

அதி­கம் பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி சமூ­கத்­தில் பரவி வரு­வ­தால் சிங்­கப்­பூ­ரில் விரை­வில் கொவிட்-19 பாதிப்பு குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உயரலாம் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

மூத்த குடி­மக்­க­ளை­யும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளை­யும் பாது­காக்­கும் வித­மாக, இம்­மா­தம் 24ஆம் தேதி­யில் இருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதி­வரை மருத்­து­வ­மனை உள்­நோ­யா­ளிப் பிரிவு­களிலும் பரா­ம­ரிப்பு இல்­லங்­களிலும் வரு­கை­யா­ளர்­களுக்கு அனுமதி இல்லை. 12 முதல் 17 வய­திற்கு உட்­பட்­டோ­ருக்­கும் கூடு­தல் தடுப்­பூ­சி போடப்படவுள்­ளது.

கொரோனா பர­வும் அபா­யத்­தைக் குறை­வாக வைத்­தி­ருக்­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பின்­ மீ­தான நெருக்­க­டி­யைக் குறைக்­க­வும் ஏது­வாக, ஐந்து பேருக்­கு­மேல் ஒன்­றாக உண்ண முடி­யாது என்­பது உள்­ளிட்ட இப்­போ­துள்ள பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் தொட­ரும் என்று அமைச்­சர் கான் தெரி­வித்து இருக்­கி­றார்.

இப்­போது அன்றாட பாதிப்­பில் கிட்­டத்­தட்ட 70% ஓமிக்­ரா­னால் ஏற்­ப­டுகிறது என்று நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு கான் சொன்­னார்.

ஓமிக்­ரான் தொற்­றி­யோ­ரில் பெரும்­பா­லோ­ருக்கு இலே­சான பாதிப்பே ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இதனிடையே, 'டெல்டா' திரி­பால் ஏற்­பட்ட உச்ச பாதிப்­பை ஓமிக்­ரான் உச்­சம் விஞ்சி­வி­ட­லாம் என்று நிதி­ய­மைச்­ச­ரும் பணிக்­குழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

ஓமிக்­ரா­னால் நாளொன்­றுக்கு 15,000 பேர் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் சொன்­ன­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், தொற்று பாதிப்பு அதையும் விஞ்ச வாய்ப்­புள்­ள­தா­க­வும் சொன்­னார்.

மற்ற நாடு­களில் 100,000 பேருக்­கு ஏறத்தாழ 400 பேர் என்ற விகி­தத்­தில் ஓமிக்­ரான் தொற்றி வருவதை அவர் சுட்­டி­னார்.

"அந்­தக் கணக்­கில் பார்த்­தால், சிங்­கப்­பூ­ரில் ஒரு நாளைக்கு 20,000 முதல் 25,000 பேர்­வரை பாதிக்­கப்­ப­ட­லாம்," என்­றார் திரு வோங்.

ஆனா­லும், எத்­தனை பேர் கடு­மை­யான தொற்­றுக்கு ஆளாகி, மருத்­து­வ­ம­னை­யில் அல்­லது தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டும் என்­ப­தில்­தான் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"அந்த வகை­யில், கட்­டுப்­பாடு­களை மேலும் கடு­மை­யாக்­காம­லேயே ஓமிக்­ரான் அலையை நம்­மால் கடக்க இய­லும் என நம்பு­கி­றோம்," என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

ஓமிக்­ரான் அலையை எதிர்­கொள்­ளும் வகை­யில், மருத்­து­வ­மனை­களில் அதிக படுக்­கை­களைக் காலி­யாக வைத்­தி­ருக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

அதற்கேது­வாக, முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்டுக்கொண்டபின், கொவிட்-19 தொற்­று­வோ­ருக்­கான தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும் காலம் பத்­தில் இருந்து ஏழு நாள்­களா­கக் குறைக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆயி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னால் 14 நாள்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் எனும் விதி நீடிக்­கிறது.