அப்பர் புக்கிட் தீமா கால்வாயில் இரட்டையரின் சடலங்கள்: தந்தை கைது

1 mins read
8acbf766-f5e7-41c4-9afb-6ea0f6970009
உயிரிழந்த சகோதரர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட் விளையாட்டு இடத்துக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் கால்வாயில் சனிக்கிழமை (ஜனவரி 22) பிரார்த்தனை மேற்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

தம்முடைய 11 வயது மகன்கள் இருவரின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதன் சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை சனிக்கிழமை (ஜனவரி 22) இரவு வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

அப்பர் புக்கிட் தீமா பகுதியின் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள விளையாட்டு இடத்தில் உதவி கோரி அந்த ஆடவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) மாலை 6.25 மணியளவில் காவல்துறையினரை அழைத்திருந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்த விளையாட்டு இடம் அருகே உள்ள கால்வாயில் 11 வயது இரட்டைச் சகோதரர்கள் அசைவின்றி கிடந்ததைக் கண்டறிந்தனர். அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.

தனக்குக் கிடைத்த முக்கியத் தகவல்களைக் கொண்டு இரவு பகல் பாராமல் தான் விசாரணை நடத்தியதாக காவல்துறை கூறியது. விசாரணையின் முடிவில் அந்த ஆடவர் கைதானார்.

நாளை திங்கட்கிழமை (ஜனவரி 24) அந்த ஆடவர்மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். இந்தச் சம்பவம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.