தமிழகத்தில் ஒரே நாளில் 30,744 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் புதிதாக பதிவாகியுள்ள கொவிட்-19 சம்பவங்கள் அதிரித்துள்ளன. 238 நாள்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பதிவான அன்றாட கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, 30,000ஐ தாண்டியபோதும் தொற்று விகிதம் மெதுவடையத் தொடங்கியுள்ளது.
மூன்றாவது கிருமி அலையில் சிக்கிய நிலையில், ஜனவரி 19ஆம் தேதியன்று 26,981 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகின. இது அதற்கு முந்தைய நாள் பதிவான சம்பவங்களைக் காட்டிலும் 3,000 அதிகம்.
இருப்பினும், ஜனவரி 20ஆம் தேதியன்று தமிழகத்தில் 28,561 புதிய சம்பவங்கள் பதிவாகியதில் தொற்று விகிதம் மெதுவடைந்திருந்தது.
வெள்ளிக்கிழமை பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களைக் காட்டிலும் சனிக்கிழமையன்று 874 கூடுதல் சம்பவங்கள், அதாவது 29,870 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
கிருமித்தொற்றுக்கு ஆளாகும் ஒருவரால் ஏற்படக்கூடிய புதிய தொற்றுச் சம்பவங்களும் இறங்குமுகமாகியுள்ளன. தொற்று நோய் தொடர்பில் இது முக்கியமான ஓர் அம்சமாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று தமிழகத்தில் 606 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
இதன்படி கிருமியால் பாதிக்கப்பட்டவர், பிறருக்குக் கிருமித்தொற்றைப் பரப்பும் சராசரி எண்ணிக்கை 1.4ஆக இருந்தது.
இதையடுத்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,155ஐ எட்டியது. அப்போது இந்த எண்ணிக்கை 3.35ஆக உயர்ந்தது.
புத்தாண்டு தினத்தன்று 3.46ஆகப் பதிவானது. இவ்வாறு 3க்கு மேல் பதிவாகினால் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் மேலும் மூன்று பேருக்குக் கிருமியைப் பரப்புவர் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
ஆனால், தற்போது தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 1.26க்குக் குறைந்துள்ளது.
இருப்பினும், விழிப்புநிலையில் இருப்பதே சிறந்தது என்கின்றனர் சுகாதார அதிகாரிகள். 2021ஆம் ஆண்டில் இரண்டாவது அலையின் உச்சத்தில் தினமும் 30,000 முதல் 36,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தினமும் பதிவாகின.
இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தது.
"மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அத்துடன் உயிர்வாயு, மருந்து ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடும் இல்லை," என்று சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
மருத்துவப் பயன்பாட்டுக்கும் இதர பயன்பாட்டுக்கும் தற்போது தேவைப்படும் பிராணவாயு அளவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 75% குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

