ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவலை சிங்கப்பூர் கையாளும் வேளையில் நிலைமையைக் கணிக்க சுகாதார அமைச்சு மூன்று அம்சங்களைக் கருத்தில்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் அவசர சிகிச்சை பிரிவுகளின் படுகை எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை, ஓமிக்ரான் வகை கிருமி சிங்கப்பூரின் மனிதவளத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் 13லிருந்து ஒன்பதுக்குக் குறைந்தது என்று திரு ஓங் சொன்னார்.
ஓமிக்ரான் வகை கிருமித்தொற்று ஏற்பட்டோரில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
எனினும், அவர்களுக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படவில்லை.
"அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நிலையாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்று புதிய ஊட்ரம் சமூக மருத்துவமனையின் திறப்பு விழாவில் பேசிய திரு ஓங் குறிப்பிட்டார்.
ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டோரில் சுமார் 1.3 விழுக்காட்டினர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் 0.3 விழுக்காட்டினருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதாகவும் திரு ஓங் கூறினார்.
எனினும், அத்தகைய நோயாளிகளுக்குப் பொதுவாக அதிக நாள்களுக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுவதில்லை என்றும் அவர் சொன்னார். அதிகபட்சமாக ஐந்து நாள்களுக்கு மட்டுமே அத்தகையோருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுவதாக அவர் கூறினார்.
"கிருமித்தொற்றுச் சம்பவங்கள் எண்ணிக்கை, விழுக்காடுகள் ஆகிய இரண்டின் ரீதியாகப் பார்த்தாலும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன," என்று திரு ஓங் குறிப்பிட்டார். "நோயாளிகளின் எண்ணிக்கை 0.1 விழுக்காடு அதிகரித்தாலும் கூடுதலாக பல படுக்கைகள் தேவைப்படுகின்றன," என்று அவர் சுட்டினார்.
மூன்றாவது மனிதவளத்திற்கு ஏற்படும் பாதிப்பு. இது குறித்தே தாம் அதிகம் கவலைப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
"மருத்துவமனைப் படுக்கைகள் நிறைவது பிரச்சினையல்ல. கிருமித்தொற்று அல்லது தொற்றியோருடன் நெருங்கிய தொடர்பு காரணமாக மனிதவளம் தனிமைப்படுத்தப் படுவதே பிரச்சினை," என்று திரு ஓங் கூறினார். கடந்த ஈராண்டுகளாக அயராது உழைத்த சுகாதார ஊழியர்களுக்கு அமைச்சர் ஓங் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
புதிய ஊட்ரம் சமூக மருத்துவமனை திறப்பு - பக்கம் 2ல்.
ஓமிக்ரான் அலை குறித்து அமைச்சர் ஓங் விளக்கம்

