இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை சந்திக்க பிரதமர் லீ சியன் லூங் இன்று பிந்தான் தீவுக்குச் செல்கிறார்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பிலிருந்து தற்போது வரையிலான இருநாட்டு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேசவும் முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை விரிவாக்கும் வழிகளை ஆராயவும் இருவரும் கலந்துரையாடுவர் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
தலைவர்களின் முந்தைய ஓய்வுத்தளச் சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் கட்டமைப்பின் அடிப் படையில் மூன்று ஒப்பந்தங்கள் இருநாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்படும்.
ஜகார்த்தாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானத் தகவல்களுக்கான ஆகாயவெளி வட்டாரத்தின் எல்லைகளை மறுசீரமைப்பது, தப்பியோடியவர்களை ஒப்படைப்பதற்கான உடன்பாடு, 2007 தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு மற்றும் இந்தோனீசிய ராணுவப் பயிற்சித் தளத்தைப் பயன்படுத்த சிங்கப்பூர்-இந்தோனீசிய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த இருநாட்டு தற்காப்பு அமைச்சர்களின் கூட்டு அறிக்கை ஆகியவை அந்த உடன்பாடுகள்.
இந்த மூன்று உடன்பாடுகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தும் ஒப்பந்தங்களை இருநாட்டுத் தலைவர்களும் பரிமாறிக்கொள்வர். ஓய்வுத்தளச் சந்திப்பிற்கு முன்னர் கையெழுத்தான பல புரிந்துணர்வுக் குறிப்புகளுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
ஏற்கெனவே கையெழுத்தான நிதி, பொருளியல் ஒத்துழைப்பு, பசுமை சுழற்சி பொருளியல் மேம்பாடு, எரிசக்தி ஒத்துழைப்பு, மனித மூலதன மேம்பாடு முதலிய அம்சங்களில் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகியுள்ளன.
பிரதமர் லீயுடன் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் ஆகியோருடன் செல்கின்றனர்.

