இந்தோனீசியாவுடனான விமான, கடல்வழிப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது பற்றி பேச்சுவார்த்தை

இந்தோனீசியாவுடனான விமான, கடல்வழிப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது பற்றி பேச்சுவார்த்தை

2 mins read
05de3e02-b22c-4358-97bb-3d8de914f1c2
சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: சாவ்பாவ் -

இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்கான புதிய பயணப் பாதையை இருவழித் திட்டமாக ஆக்குவது தொடர்பில் இந்தோனீசியாவுடன் சிங்கப்பூர் கலந்தாலோசிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவரும் வகையில் வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் லீயும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஒப்புக்கொண்டனர்.

"ஆனாலும், கொவிட்-19 சூழலை, குறிப்பாக உருமாறிய ஓமிக்ரான் கிருமிப் பரவலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால், இரு நாடுகளிலும் காணப்படும் பொதுச் சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு, இருதரப்பிற்கும் உகந்த நேரத்தில் அப்பேச்சுவார்த்தை இடம்பெறும்," என்று திரு லீ சொன்னார்.

சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பிரதமர் லீ இவ்வாறு கூறினார்.

முன்னதாக, புகழ்பெற்ற தனது இரு சுற்றுலாத் தலங்களான பாத்தாமுக்கும் பிந்தானுக்கும் சிங்கப்பூரர்கள் வந்து செல்லும் வகையில் புதிய பயணப் பாதைத் திட்டத்தை இந்தோனீசியா நேற்று அறிவித்திருந்தது.

இரு நாடுகளிலும் கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கான பயணப் பாதையைத் திறக்க இந்தோனீசிய அரசாங்கம் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹார்ட்டார்ட்டோ தெரிவித்திருந்தார்.

அந்த ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூர் பயணிகள் பாத்தாமில் உள்ள நொங்சாபுரா படகு முனையம் வழியாகவும் பிந்தானில் உள்ள பண்டார் பெந்தான் தெலானி படகு முனையம் வழியாகவும் இந்தோனீசியாவினுள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் முழுமையாக கொவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், அத்துடன், இந்தோனீசியா சென்றடையுமுன் குறைந்தது கடைசி 14 நாள்களும் சிங்கப்பூரில் இருந்திருக்க வேண்டும்.

மேலும், சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு மூன்று நாள்களுக்குள் 'பிசிஆர்' பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்தோனீசியா சென்றதும் அங்கும் ஒருமுறை 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கடந்த நவம்பரில், ஜகார்த்தாவில் இருந்து குறித்த விமானங்களில் வரும் பயணிகளுக்காக தடுப்பூசி போட்டோருக்கான ஒருவழிப் பயணப் பாதையை சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியது.