175 நிறுவனங்களுக்கு $1.1 மில்லியன் அபராதம்

175 நிறுவனங்களுக்கு $1.1 மில்லியன் அபராதம்

1 mins read
f00a0481-29b6-4b6a-9e06-7d3ab3823f03
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை அனுமதி அட்டை ஊழியர்கள் 960 பேரின் வசிப்பிட முகவரிகளைக் குறித்த காலத்தில் புதுப்பிக்கத் தவறியதற்காக கடந்த ஈராண்டுகளில் 175 நிறுவனங்களுக்கு $1.1 மில்லியனுக்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் மூலமாகத் திரும்ப திரும்ப நினைவூட்டியும் அந்நிறுவனங்கள் அதைச் செய்யத் தவறியதாக மனிதவள அமைச்சு இன்று புதன்கிழமை (ஜனவரி 26) தெரிவித்தது.

ஒவ்வொரு வேலை அனுமதி அட்டை ஊழியருக்கும் $500 முதல் $2,000 வரை என்ற கணக்கில் அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சின் 'வெளிநாட்டு ஊழியர் முகவரி சேவை' இணையப் பக்கம் வழியாக நிறுவனங்கள் தங்களது வேலை அனுமதி அட்டை ஊழியர்களின் வசிப்பிட முகவரிகளைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வேறு வசிப்பிடத்திற்கு மாறினால், ஐந்து நாள்களுக்குள் புதிய முகவரியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

"பொதுச் சுகாதார அல்லது தொடர்புகளின் தடமறிதல் போன்ற அவசர காரணங்களுக்காக, வேலை அனுமதி அட்டை ஊழியர்களைத் தொடர்புகொள்ள ஏதுவாக அவர்களின் வசிப்பிட முகவரி குறித்த துல்லியத் தகவல்களைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியம்," என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

அதனால், தங்கள் ஊழியர்களுடன் தொடர்பைப் பேணுமாறும் ஊழியர்கள் தாங்களாக வேறு வசிப்பிடத்திற்கு மாறினால் அதுகுறித்துத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.

தனது இணையப் பக்கத்தில் ஊழியர்களின் முகவரிகளைப் புதுப்பிக்கத் தவறும் நிறுவனங்கள்மீது அமலாக்க நடவடிக்கை தொடரும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்