பொருளைப் பெறும் போது பணம் செலுத்துவதன் தொடர்பில் உள்ள மோசடிகளைப் பற்றி எச்சரிக்கும் 500,000 துண்டு பிரசுரங்கள், வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகின்றன. விநியோக நிறுவனமான நிஞ்சாவேன், அது குறித்து காவல்துறையோடும் தேசிய குற்றத் தடுப்பு மன்றத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தங்குவிடுதிகள் மூலமும் இல்லப் பணிப்பெண்களுக்கு உதவி அமைப்புகள் மூலமும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணியாளர்களும் பொருள்களைப் பெறும்போது பணம் செலுத்தும் தெரிவை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அந்த தெரிவைச் சேர்ந்த 60 விழுக்காடு பொட்டலங்கள், ஊழியர் தங்குவிடுதிகளுக்கு அனுப்பப்படுவதாக நிஞ்சாவேன் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி லீ கிம் ஹோக் கூறினார்.
"பொருளைப் பெறும்போது பணம் செலுத்தலாம் என்று கூறி மோசடி செய்பவர்கள் விற்பனை அதிகமுள்ள இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை அதிகம் குறிவைப்பார்கள். அதனால் ஆண்டு இறுதி நேரத்தில் நிஞ்சாவேன், மோசடி பற்றிய அதன் விழிப்புணர்வு இயக்கத்தை அதிகமாக முன்னெடுக்கிறது." என்று திரு லீ கூறினார்.
விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துவது பற்றி நிஞ்சாவேன் கடந்த நவம்பர் மாதம் போலிசாரையும் தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தையும் தொடர்பு கொண்டது.
இரண்டு அமைப்புகளும் துண்டுப் பிரசுரங்களை வடிவமைத்து அச்சிட்டன.
நிஞ்சாவேன், தான் அனுப்பும் பொட்டலங்களுடன் சேர்த்து துண்டுப் பிரசுரங்களை அனுப்பியது.
வேலைகள், பொருள்களைப் பெறும்போது பணத்தைச் செலுத்துதல் என இரண்டு வகை மோசடிகள் பற்றி அந்த பிரசுரங்கள் விளக்குகின்றன.
அதிக சம்பளம் கொடுக்கும் வேலைகள் உள்ளதாக அல்லது 'நம்ப முடியாத அளவுக்கு' விலைச் சலுகைகள் தருவதாகக் கூறி ஆசை காட்டும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று துண்டுப் பிரசுரங்கள் எச்சரிக்கின்றன. குறிப்பாக தாங்கள் வாங்காத எந்தப் பொருளுக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்று அவை கூறுகின்றன.
இல்லப் பணியாளர்களுக்கு மின் பிரசுரங்களை அனுப்ப நிஞ்சாவேன் மனிதவள அமைச்சுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளது.
அந்த மின் பிரசுரங்கள் தமிழ், பஹாசா இந்தோனீசியா, தகலோக், பர்மிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இல்லாப் பணியாளர்களுக்கு உதவும் பல்வேறு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.