சிங்கப்பூர் ஃபோர்முலா ஒன்று கார்பந்தயத்தை வரும் 2028ஆம் ஆண்டு வரை இங்கு தொடர்ந்து நடத்தவிருக்கிறது.
அடுத்த ஃபோர்முலா ஒன்று இரவுநேரக் கார்ப்பந்தயம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும்.
அது குறித்த புதிய ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் சிங்கப்பூர் ஜிபி நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
இரு தரப்புகளும் அது குறித்த கூட்டறிக்கையை வியாழன் (ஜனவரி 27) அன்று வெளியிட்டன.
சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறக்கவும் கொவிட்-19 உள்ள உலகில் இயல்பு நிலைக்கு திரும்பவும் உறுதிகொண்டிருப்பதைக் காட்டும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் ஃபோர்முலா ஒன்றுடன் செய்யப்பட்ட உடன்பாடுகள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் நீடித்தன.
ஆனால் இந்த ஒப்பந்தம் ஏழு ஆண்டுகள் நீடிக்கும்.
வர்த்தகத்துக்கும் பொழுதுபோக்குக்குமான இடமாக சிங்கப்பூரை மீண்டும் நிலைப்படுத்த உதவுவது இதன் நோக்கம்.
கிருமிப்பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவுநேரப் பந்தய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
கார்ப்பந்தய தவணையை நீட்டிப்பதால் சிங்கப்பூருக்கு ஏற்படுத்தும் நீண்டகால அனுகூலங்களை முழுமையாக ஆராய்ந்தபின்னர் பந்தயத்தை இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு எடுத்து நடத்த சிங்கப்பூர் முடிவு செய்ததாக திரு ஈஸ்வரன் அறிக்கையில் குறிப்பிட்டார்.
கார்ப்பந்தயத்தில் பங்குபெறுபவர்கள், ஊழியர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ரசிகர்கள், சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரின் உடல்நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய இதில் தொடர்புள்ள அனைத்து தரப்புகளும் பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றும் என்று கூட்டறிக்கை கூறியது.

