எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் (எஸ்எம்டி), கடந்த சில மாதங்களில் அதன் திறனாளர்களையும் தொழில்நுட்ப ஆற்றலையும் பெருக்குவதில் செலவிட்டுள்ளது.
தரமான, நம்பகமான செய்தித் துறையை வழங்கும் பணியைத் தொடரும் வேளையில் இந்த இரண்டு அம்சங்களில் எஸ்எம்டி கவனம் செலுத்தும் என்று அதன் தலைவர் கோ பூன் வான் கூறியுள்ளார்.
அத்துடன் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டிக் புதிய தலைமை நிர்வாகி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது பெயர் அடுத்த இரண்டு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்று திரு கோ கூறினார்.
வியாழன் அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
அந்தக் கூட்டத்தில சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதி தனித்துப் பிரிக்கப்பட்ட எஸ்எம்டி பற்றி மேல்விவரம் அளிக்கப்பட்டது.
திறனாளர்களிலும் தொழில்நுட்ப ஆற்றல்களிலும் அது அதிகமாக முதலீடு செய்யும் என்றார் அவர்.
ஆரம்பக்கட்ட முதலீடுகளில் சிலவற்றுக்கு நிதி ஆதரவு அளிக்க அரசாங்கம் கொள்கை ரீதியாக இணங்கியுள்ளது என்று திரு கோ குறிப்பிட்டார்.
நிதி ஆதரவு பற்றி அரசாங்கத்துடனும் குல சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்ற இதர அமைப்புகளுடனும் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
அதன் தொடர்பில் விரைவில் அறிக்கப்படும் என்றார் திரு கோ.
திரு கோவுடன் எஸ்எம்டியின் இடைக்கால தலைமை நிர்வாகி பேட்ரிக் டேனியல், ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவுத் தலைமை ஆசிரியர் வாரன் ஃபெர்னான்டஸ், சீன ஊடகப் பிரிவுத் தலைவர் லீ ஹுவே லெங் ஆகியோரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மின்னிலக்கம், பல்லூடகம் ஆகியவற்றில் தனது செய்தியாளர்களின் திறன்களை வலுப்படுத்தும் ஊடகப் பயிற்சிக் கழகத்தை எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் அமைக்கும் என்று திரு கோ கூறினார்.
எஸ்எம்டி தொழில்நுட்பத்திலும் அதிகமாக முதலீடு செய்யும்.
தனது செய்தித்தாள்களின் செயலிகள், இணையத்தளங்களைப் பயன்படுத்துவோரின் பயனாளர் அனுபவத்தை மேம்படுத்துவதும் செய்தித்தாள்கள் அவற்றின் உள்ளடக்கத்தையும் சிறப்பாகவும் நேரத்துடனும் வழங்குவதை உறுதி செய்வதும் அதன் நோக்கம்.
அத்துடன் போலி செய்திகளை எதிர்கொள்ள எஸ்எம்டி உண்மையை சரிபார்க்கும் சேவையை அமைக்கும் என்று ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் தலைமை ஆசிரியர் வாரன் ஃபெர்னான்டெஸ் கூறினார்.
மேலும் சந்தாக்களையும் வெளிநாட்டு வாசகர்களையும் அதிகரிக்கவும் எஸ்எம்டி கூடுதல் முயற்சி எடுக்கும் என்றும் திரு ஃபெர்னான்டெஸ் குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறிப்பாக இளம் சிங்கப்பூரர்களிடையே தாய்மொழிகளை ஊக்குவிப்பது எஸ்எம்டியின் முக்கிய பணியாக இருக்கும் என்றார் அவர்.

