வரும் 2023ன் முற்பகுதியில் இருந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்குப் பயனீட்டாளர்களிடம் ஐந்து முதல் பத்துக் காசு வரை பேரங்காடிகள் வசூலிக்கக் கூடும்.
அதன் தொடர்பான திட்டம் பற்றிய பொதுமக்களின் கருத்தை தேசிய சுற்றுப்புற அமைப்பு கோரியுள்ளது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை அமைப்பு வியாழன் (ஜனவரி 27) அன்று வெளியிட்டது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு, வீசியெறியக்கூடிய பைககளைக் குறைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது அதன் நோக்கம்.
சிங்கப்பூரில் உருவாக்கப்படும் கழிவுப் பொருள்களைக் குறைப்பதற்கான அரசாங்கப் பரிந்துரைகளின் ஒரு பகுதியாக அந்த நெறிமுறைகள் அமைந்துள்ளன.
இங்குள்ள பெரும்பாலான பேரங்காடிகள் வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையம் வழியாகப் பொருள் வாங்குவதற்கு இது பொருந்தாது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் குழுக்கள் கோரி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சராசரியாக ஒருவருக்கு 146 பைகள் என, ஓராண்டில் 820 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பேரங்காடிகளில் இருந்து பெற்றுச் செல்லப்படுகின்றன என்பது லாப நோக்கமற்ற 'சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றம்' கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்தது.
வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பான தங்களது கருத்துகளை அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான 'ரீச்' இணையத்தளம் வழியாக அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.


