2028 வரை நடத்த ஒப்பந்தம்

2028 வரை நடத்த ஒப்பந்தம்

2 mins read

சிங்கப்பூரில் இரவுநேர எஃப்1 கார் பந்தயம் இவ்வாண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடக்கும்

சிங்­கப்­பூ­ரில் ஃபார்முலா ஒன் (எஃப்1) விரைவு கார் பந்­த­யம் இன்­னும் ஏழாண்­டு­க­ளுக்கு நடத்­தப்­படும் என்று சிங்­கப்­பூர் பய­ணத்துறைக் கழ­க­மும் சிங்­கப்­பூர் ஜிபி அமைப்­பும் அறி­வித்­துள்­ளன.

எஃப்1 குழு­மத்­து­டன் செய்­யப்­பட்­டுள்ள ஆக நீண்­ட­கால ஒப்­பந்­தம் இது. இதற்­கு­முன் நான்கு முதல் ஐந்­தாண்­டு­க­ளுக்கே ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டது.

வணிக, வாழ்க்­கைப்­பாணி மைய­மாக சிங்­கப்­பூர் தனது இடத்தை மீண்­டும் நிலை­நி­றுத்த உத­வும், நீண்­ட­கால நோக்­கில் நாடு தனது போட்­டித்­தன்­மைச் சாதக நிலையை உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கில் இப்­படி நீண்­ட­கா­லத்­திற்கு ஒப்­பந்­தம் புதுப்­பிக்­கப்­பட்டுள்­ளது.

கொவிட்-19 தொற்­றுப் பர­வல் கார­ண­மாக கடந்த ஈராண்­டு­களாக சிங்­கப்­பூ­ரில் இர­வு­நேர எஃப்1 பந்­த­யம் இடம்­பெ­ற­வில்லை.

கடை­சி­யாக 2017ஆம் ஆண்டு நான்­காண்­டு­க­ளுக்கு ஒப்­பந்­தம் புதுப்­பிக்­கப்­பட்­டது. பந்­த­யத்­தின் முதன்மை ஆத­ர­வா­ள­ராக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் உட­னான ஒப்­பந்­த­மும் கடந்த ஆண்­டு­டன் முடி­விற்கு வந்­தது.

இந்­நி­லை­யில், வரும் 2028ஆம் ஆண்­டு­வரை இங்கு எஃப்1 பந்­த­யம் இடம்­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு அக்­டோ­பர் 2ஆம் தேதி மரினா பே சாலைப் பந்­த­யத் தடத்­தில் அப்­பந்­த­யம் இடம்­பெ­றும்.

"தொற்­றுப் பர­வல் ஏற்­ப­டுத்­தி­ உள்ள உட­னடி சவால்­களை எதிர்­கொண்டு வந்­தா­லும், பொரு­ளி­யல் மீட்­சி­யி­லும் நீண்­ட­கால வளர்ச்­சி­யி­லும் நாம் கவ­னம் செலுத்­து­கிறோம் என்­பது முக்­கி­ய­மா­னது. சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்ப்­ப­தி­லும் அனைத்­து­லக நிகழ்ச்­சி­க­ளுக்­கும் வர்த்­த­கச் சந்­திப்­பு­க­ளுக்­கும் சிங்கப்­பூர் எஃப்1 பந்­த­யம் தொடர்ந்து வலு­வா­ன­தொரு மையப்புள்­ளி­யாக விளங்­கும்," என்று போக்கு­வரத்து அமைச்­சரும் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

எஃப்1 பந்­த­யம் நடத்­தும் காலத்தை மேலும் நீட்­டிப்­ப­தால் விளை­யும் நீண்­ட­கா­லப் பயன்­களை முழு­மை­யாக மதிப்­பிட்ட பின்­னரே, இன்­னும் ஏழாண்டு­களுக்கு அத­னைத் தொடர்ந்து நடத்த முடி­வு­செய்­யப்­பட்­டது என்று திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்­பெற்ற பந்­த­ய­மா­னது மூன்று நாள்­க­ளி­லும் சேர்த்து மொத்­தம் 268,000 பார்­வை­யா­ளர்­களை ஈர்த்­தது.

வழக்­க­மாக, பார்­வை­யா­ளர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­களாக இருப்­பர். பந்­த­யக் காலத்­தில் சுற்­றுப்­ப­ய­ணி­கள் மூல­மாக ஆண்­டிற்கு $130 மில்­லி­யன் வரு­மா­னம் ஈட்­டப்­படும்.

கடந்த 2008ஆம் ஆண்­டில் இருந்து 12 முறை இங்கு எஃப்1 பந்­த­யங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. அவை 550,000க்கும் மேற்­பட்ட வெளி­நாட்­டுப் பார்­வை­யா­ளர்­களை ஈர்த்­துள்­ளன. அவர்­கள் மூல­மாக $1.5 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான வரு­மா­னம் ஈட்­டப்­பட்­டுள்­ளது.

ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் இந்த இர­வு­நேர கார் பந்­த­யத்­திற்கு $135 மில்­லி­யன் செல­வா­கிறது. அதில் 60 விழுக்­காட்டை வர்த்­தக, தொழில் அமைச்­சும் சிங்­கப்­பூர் பய­ணத்துறை கழ­க­மும் ஏற்­கும். எஞ்­சிய தொகைக்­குப் பந்­தய விளம்­ப­ர­தா­ர­ரான சிங்­கப்­பூர் ஜிபி ஏற்றுக்கொள்ளும்.

இத­னி­டையே, என்­எஸ் சதுக்­கத்­தைக் கட்­டத் திட்­ட­மிட்­டுள்­ள­தால் மரினா பே பந்­த­யத் தடம் சற்று மாற்­றி­ய­மைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.