முதலில், பேருந்து மற்றும் ரயில் கட்டண உயர்வு. அடுத்ததாக, வரும் மார்ச் மாதவாக்கில் டாக்சி கட்டணங்களும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த தனக்கு எண்ணம் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது. அதாவது, டாக்சியில் ஏறும்போது ஆரம்பக் கட்டணமும் தூர அடிப்படையிலான கட்டணமும் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
சிங்கப்பூரில் உள்ள ஏறக்குறைய 15,000 டாக்சிகளில் 60 விழுக்காடு கம்ஃபர்ட்டெல்குரோவின்கீழ் வருகின்றன.
கட்டண உயர்வு தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 27) கேட்ட கேள்விகளுக்கு பொதுப் போக்குவரத்து மன்றம் இன்னும் பதிலளிக்கவில்லை.
தற்போது, டீசல் டாக்சிகளுக்கான ஆரம்பக் கட்டணம் $3.70வும் பெட்ரோல்-மின்சார கலப்பு டாக்சிகளுக்கான கட்டணம் $3.90வும் உள்ளது. முதல் 10 கிலோமீட்டரில் ஒவ்வொரு 400 மீட்டருக்கும் கட்டணம் 22 காசு உயர்கிறது. 10 கிலோமீட்டருக்குப் பிறகு, ஒவ்வொரு 350 மீட்டருக்கும் கட்டணம் 22 காசு உயர்கிறது.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் கடைசியாக 2011ல் டாக்சி கட்டணத்தை உயர்த்தியிருந்தது. ஆரம்பக் கட்டணத்தை 20 காசும் மீட்டர் கட்டணத்தை இரண்டு காசும் உயர்த்தியிருந்தது. இனி வரக்கூடிய கட்டண உயர்வும் இதேபோன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்சி கட்டணத்தை கம்ஃபர்ட்டெல்குரோ உயர்த்திய பிறகு டிரான்ஸ்கேப், எஸ்எம்ஆர்டி, பிரிமியர், பிரைம் ஆகிய இதர டாக்சி நிறுவனங்களும் அவ்வாறே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


