சிங்கப்பூர் ஊழியர் சந்தை தொடர்ந்து மீண்டு வருகிறது. ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலுக்கு மத்தியிலும் சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் வேலை கிடைத்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்தது. வேலை கிடைத்த குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை ஈராண்டுகளில் முதன்முறையாகக் கூடியது.
சிங்கப்பூரின் வேலையின்மை விகிதமும் குறைந்தது. வரும் மாதங்களில் கொள்ளைநோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய காலத்தில் இருந்த அளவிற்கு வேலையின்மை விகிதம் குறையலாம், சிங்கப்பூர் அதை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது.
"2022ஆம் ஆண்டில் ஊழியர் சந்தை தொடர்ந்து மேம்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அனைத்துலக அளவில் மீண்டும் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதும் உள்ளூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும் இதற்குத் தூண்டுகோல்களாக அமையலாம். எனினும், கொவிட்-19 சூழலுக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைக்குத் திரும்புவதில் பல்வேறு துறைகள் மாறுபட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளன, அதோடு கிருமிப் பரவல் சூழல் தொடர்பில் இன்னமும் தெளிவு ஏற்படவில்லை," என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
நேற்று வெளியிடப்பட்ட முன்னோடி கணிப்புகளின்படி, வேலை கிடைத்தவர்களின் மொத்த எண்ணிக்கை சென்ற ஆண்டு மீண்டுவந்தது. 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை சரிந்தது.
சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் கூடுதலாக 47,400 பேருக்கு வேலை கிடைத்தது. இந்த எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இல்லப் பணிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை.
வேலை கிடைத்த சிங்கப்பூர் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்கான காரணங்களில் ஒன்று.
"சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் ஊழியர் சந்தை தொடர்ந்து மீண்டுவந்தது, அதோடு, ஓமிக்ரான் கிருமிப் பரவல் சூழலினால் கொவிட்-19 தொடர்பில் உலகளவில் தெளிவான நிலை இல்லாதபோதும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பொருளியல் வளர்ச்சியடைந்தது ஆகியவை நிச்சயமாக நிம்மதி தருகின்றன," என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்ற மாதம் வேலையின்மை விகிதமும் மேம்பட்டது. எனினும், கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய சூழலில் இடம்பெற்ற புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் பதிவாகும் வேலையின்மை விகிதம் குறைவாகவே இருந்தது. சென்ற மாதம் பதிவான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.4 விழுக்காடு. கடந்த நவம்பர் மாதம் இந்த விகிதம் 2.5ஆக இருந்தது.
சென்ற ஆண்டு முழுவது பதிவான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.6க்குக் குறைந்தது. 2020ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மூன்று விழுக்காடாக இருந்தது.
எனினும், இந்த விகிதம் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய சூழலில் பதிவானதைக் காட்டிலும் அதிகம் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது.

