இவ்வாண்டு மார்ச் மாதம் டாக்சி கட்டணங்கள் உயர்த்தப்படலாம். பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இவ்வாறு நிகழக்கூடும்.
சிங்கப்பூரில் இயங்கும் மொத்த டாக்சிகளில் 60 விழுக்காட்டை நிர்வகிக்கும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம், ஒரு பயணத்தின் அடிப்படைக் கட்டணம், போகும் தூரத்துக்கான கட்டணம் ஆகியவற்றை உயர்த்தும் எண்ணம் கொண்டுள்ளதை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. கம்ஃபர்ட்டெல்குரோ சுமார் 15,000 டாக்சிகளை நிர்வகிக்கிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பொதுப் போக்குவரத்து அமைப்பு பதிலளிக்கவில்லை. பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் மாறும்போது அந்த அமைப்புக்குத் தகவல் தெரிவிப்பது அவசியம்.
தற்போது டீசலில் இயங்கும் பெரும்பாலான டாக்சிகளுக்கான அடிப்படைத் தொடக்கக் கட்டணம் 3.70 வெள்ளி. பெட்ரோல், மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயங்கும் டாக்சிகளுக்கான அடிப்படைத் தொடக்கக் கட்டணம் 3.90 வெள்ளி. அதற்குப் பிறகு ஒவ்வொரு 400 மீட்டருக்கும் கூடுதலாக 22 காசு செலுத்தவேண்டும். இதுதான் முதல் 10 கிலோமீட்டர் தூரத்துக்கான கட்டண முறை. 10 கிலோமீட்டரைத் தாண்டிய பிறகு ஒவ்வொரு 350 மீட்டருக்கும் 22 காசு செலுத்தவேண்டும்.
கடைசியாக 2011ஆம் ஆண்டு கம்ஃபர்ட்டெல்குரோ சேவைக் கட்டணங்களை உயர்த்தியது. அப்போது இந்நிறுவனம் பெரும்பாலான டாக்சி சேவைகளின் அடிப்படைக் கட்டணத்தை 20 காசு அதிகரித்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு குறிப்பிட்ட தூரம் செல்வதற்கான கட்டணமும் இரண்டு காசு உயர்த்தப்பட்டது. பொதுவாக கம்ஃபர்ட்டெல்குரோ தனது சேவைக் கட்டணங்களை உயர்த்தும்போது டிரான்ஸ்-கேப், எஸ்எம்ஆர்டி, பிரிமியர், பிரைம் ஆகிய இதர டாக்சி நிறுவனங்களும் தங்களின் கட்டணங்களை அதிகரிக்கும்.

