காற்றோட்டமாக இருக்கச் செய்வது, அதனுடன் மின்விசிறிகள் ஆகியவற்றின் மூலம் கட்டடங்களில் கிருமிப் பரவலைக் குறைப்பதன் தொடர்பில் கட்டட, கட்டுமான ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளது. தற்போது நடப்பில் இருக்கும் கட்டடங்களுக்கான வழிமுறைகளில் கொவிட்-19 போன்ற கிருமிப் பரவல் தடுப்பு, தவிர்ப்பு அம்சங்கள் இடம்பெறவில்லை என்று கட்டட, கட்டுமான ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இந்த ஆய்வின் முடிவுகள், தற்போது நடப்பில் இருக்கும் கட்டடங்களுக்கான வழிகாட்டிகள், செயல்பாட்டு வழிமுறைகள் உள்ளிட்டவற்றை மறுபரிசீலனை செய்ய அரசாங்க அமைப்புகளுக்கு உதவும். அத்துடன் காற்றோட்டமாகக் கட்டடங்களை வைத்திருப்பது குறித்த பரிந்துரைகளை அரசாங்க அமைப்புகள் முன்வைக்கலாம் என்று ஆணையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவை, ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களுடன் புதிய கட்டடங்களுக்கும் பொருந்தும்.
அலுவலகங்கள் இருக்கும் கட்டடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள் உள்ளிட்டவற்றை இந்த ஆய்வு கருத்தில்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைச் சந்திப்புகள் நடைபெறும் இடங்கள், அரங்குகள், கடைகள் உள்ளிட்டவை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
34 வாரங்கள் நீடிக்கவிருக்கும் இந்த ஆய்வை வரும் ஏப்ரல் மாதம் ஆணையம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு தொடங்கியதிலிருந்து கூடுதலானோர் வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி வீட்டிலிருந்து வேலை பார்க்கக்கூடியோரில் 50 விழுக்காட்டினர் அலுவலகத்திற்கு மீண்டும் செல்லலாம்.
உள்ளரங்குகள், காற்றோட்டமாக இல்லாத இடங்கள் ஆகியவற்றில் கொவிட்-19 கிருமி எளிதில் பரவுவதாக தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொது சுகாதாரப் பள்ளியின் பேராசிரியர் தியோ யிக் யிங் கூறினார். உள்ளூரிலும், உலகளவிலும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இதைத்தான் காட்டுகின்றன என்பதை அவர் சுட்டினார்.
கட்டட வடிவம், செயல்பாடுகள் ஆகியவற்றை மறுபரீசிலிக்க வேண்டியதன் அவசியத்தை கொள்ளைநோய்ப் பரவல் உருவாக்கியுள்ளது என்று தேசிய பல்கலைக்கழகத்தின் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பிரிவின் துணை பேராசிரியர் தம் குவோக் வாய் கூறினார். அதனால் கட்டட, கட்டுமான ஆணையத்தின் ஆய்வு தக்க நேரத்தில் இடம்பெறுவதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் பருவநிலையைக் கருத்தில்கொள்ளும்போது குளிர்பதனப் பெட்டியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கட்டடங்களைக் காற்றோட்டமாக வைத்திருப்பது போன்றவை நல்ல தீர்வுகளாக அமையலாம் என்று கட்டட, கட்டுமான ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

