வீடுகளில் புதுப்பிப்பு வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிரான புகார்கள் சென்ற ஆண்டில் ஏறக்குறைய பாதி அளவுக்கு அதிகரித்தன.
அந்தப் புகார்களில் கிட்டத்தட்ட பாதிப் புகார்கள், வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து கொடுக்கவில்லை என்றும் வேலை சரியில்லை என்றும் தெரிவித்தன.
இந்தத் தொழில்துறையைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டில் 1,300 புகார்கள் தாக்கலானதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை 2020ல் 869 ஆக இருந்தது. கொவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகளின் விளைவாக கச்சாப்பொருள்கள் சரிவர கிடைக்கவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையும் நீடித்தது.
அதேவேளையில், சென்ற ஆண்டில் வீட்டு சொத்துச் சந்தையில் நிலவிய புதுப்பிப்பு வேலைகளுக்கான தேவையும் இதற்குக் காரணம் என்று பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
இந்த அமைப்பு இன்று தனது வருடாந்திர பயனீட்டாளர் புகார் புள்ளிவிவரங்களை அறிவித்தது.
பயணம், மருத்துவம், மருத்துவப் பயனீட்டுத் தொழில்துறைகளைப் பொறுத்தவரை புகார்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்து இருக்கிறது.