புத்தாண்டுக் கொண்டாட்ட காலத்திலும் அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்களைச் சந்தித்து பிரதமர் நன்றி கூறினார்
உலகம் முழுவதும் இப்போது நிலவும் ஓமிக்ரான் தொற்று காரணமாக பொருளியலைப் பொறுத்தவரை நிச்சயமில்லாத நிலை தொடர்ந்து நிலவுகிறது.
இந்தச் சூழலில் இந்த ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சி பற்றி எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையைத் தான் கொண்டிருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
சீனப் புத்தாண்டின் முந்திய நாளான நேற்று ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதிக்குப் பிரதமர் லீ சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அமெரிக்கப் பொருளியல் வலு வாக வளர்ச்சி கண்டு வருவதை அவர் சுட்டினார். அதேபோல் ஓமிக்ரான் தொற்று அதிகம் இருந்தாலும் ஐரோப்பாவும் வளர்ந்து வருவதை அவர் எடுத்துக் கூறினார்.
வளர்ந்த நாடுகளில் வேகமாக பரவிய ஓமிக்ரான் தொற்று அதே வேகத்தில் குறைந்து வருவதாகத் தெரிகிறது என்று தெரிவித்த திரு லீ, இதன் விளைவாக அதிக பாதிப்பு இல்லாமல் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று நம்பலாம் என்றார்.
சீனாவில் என்ன நிகழும் என்பது இன்னமும் தெரியாத சூழல் இருக்கிறது என்பதையும் திரு லீ சுட்டிக்காட்டினார்.
ஆகையால் அதை அணுக்கமாக நாம் கண்காணித்து வரவேண்டும் என்றார் அவர். தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூரின் பக்கத்து நாடுகளும் நல்ல நிலைக்குத் திரும்பி வருகின்றன என்று திரு லீ குறிப்பிட்டார்.
கட்டம் கட்டமாக எல்லைகள் திறக்கப்படும் சூழலில் இந்த வட்டாரத்துக்குள் தொழில்களும் பயணமும் மீண்டும் சூடுபிடிக்கும் என்று தான் நம்புவதாகவும் திரு லீ தெரிவித்தார்.
"சிங்கப்பூரை பொறுத்தவரை, சில துறைகள் குறிப்பாக உணவு, பானம், சுற்றுலா, பொழுதுபோக்கு துறைகள் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன.
"இருந்தாலும் இந்த ஆண்டில் பொருளியல் 3% முதல் 5% வரை வளரும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் மொத்தத்தில் நமக்கு எல்லாம் அனுகூலமாக இருக்கும் என்றே தெரிகிறது," என்றார் திரு லீ.
"சிங்கப்பூர் வளர்ச்சியின் உத்வேகம் வலுவாக இருந்து வருகிறது. உற்பத்தி, நிதி சேவைகளும் இதர துறைகளும் நன்றாக செயல்பட்டு வருகின்றன.
"சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். முயற்சிகளை நாம் கைவிட்டுவிடக் கூடாது. அதேவேளையில், அளவுக்கு அதிக அவநம்பிக்கையும் தேவையில்லை," என்றாரவர்.
சீனப் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் உணவு விநியோக ஊழியர்கள், டாக்சி ஓட்டுநர்கள், கடைத்தொகுதி ஊழியர்களுக்கு பிரதமர் திரு லீ நன்றி கூறினார்.

