10 ஆண்டுகளில் முதல் முறையாக கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி கட்டணம் விலை ஏற்றம்

10 ஆண்டுகளில் முதல் முறையாக கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி கட்டணம் விலை ஏற்றம்

1 mins read
ad2b50f6-ffc2-4d6c-863c-7ea4f808df43
-

சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட் டெல்குரோ, டாக்சி கட்டணத்தை மார்ச் 1 முதல் உயர்த்தவுள்ளது.

10 ஆண்டுகளில் முதல் முறையாக கம்ஃபர்ட் டெல்குரோ தனது கட்டணத்தை இப்போது உயர்த்தியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஏறக்குறைய 15,000 டாக்சிகளில் 60% அதாவது கிட்டத்தட்ட 8,900 டாக்சிகள் கம்ஃபர்ட் டெல்குரோவுக்குச் சொந்தமானவை. மார்ச் 1 முதல், டாக்சியில் ஏறும்போது வசூலிக்கப்படும் ஆரம்பக் கட்டணமும் தூர அடிப்படையிலான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

டாக்சியின் ஆரம்பக் கட்டணம் 20 காசுகள் உயரும். இதன் மூலம் ஹயுண்டாய் i40 (Hyundai i40) ரக டாக்சிகளின் தொடக்கக் கட்டணம் $3.70லிருந்து $3.90க்கு அதிகரிக்கும்.

டொயோட்டா பிரையஸ் (Toyota Prius), ஹயுண்டாய் ஐயானிக்(Hyundai Ioniq), ஹயுண்டாய் கோனா (Hyundai Kona) ரக டாக்சிகள் மற்றும் லிமோகேப், மாக்ஸிகேப் டாக்சிகளின் ஆரம்பக் கட்டணம் $3.90லிருந்து $4.10க்கு அதிகரிக்கும்.

தூர அடிப்படையிலான கட்டணமும் உயர்த்தப்படும். வழக்கமான டாக்சிகளில் ஒவ்வொரு 400 மீட்டர் (அல்லது 10 கிலோமீட்டர் தூரத்திற்குப் பிந்திய ஒவ்வொரு 350 மீட்டர்) தூரத்திற்கும் கட்டணம் 2 காசுகள் அதிகரித்து 24 காசுகள் வசூலிக்கப்படும். லிமோசின் சொகுசு டாக்சிகளுக்குக் கட்டணம் 30லிருந்து 33 காசுகள் அதிகரிக்கப்படும்.

அதே போல வழக்கமான டாக்சிகள் காத்திருக்கும் நேரத்திற்கான கட்டணம் ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் 2 காசுகள் அதிகரித்து 24 காசுகள் வசூலிக்கப்படும். லிமோசின் சொகுசு டாக்சிகளுக்குக் கட்டணம் 30லிருந்து 33 காசுகளுக்கு அதிகரிக்கப்படும்.

டாக்சி கட்டணத்தை கம்ஃபர்ட்டெல்குரோ உயர்த்தியதால் டிரான்ஸ்கேப், எஸ்எம்ஆர்டி, பிரிமியர், பிரைம் ஆகிய இதர டாக்சி நிறுவனங்களும் அவ்வாறே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.