சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது பிரிவினரிடையே கொவிட்-19 தொற்று விகிதம் ஆக அதிகம்

1 mins read
b344faf0-5a30-474a-bf41-54c970917a25
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது பிரிவினரிடையே தற்போது கொவிட்-19 தொற்று விகிதம் ஆக அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

காரணம், டெல்டா திரிபைவிட ஓமிக்ரான் திரிபு சிறுவர்களைத் தொற்றும் சாத்தியம் அதிகம் என்றார் அவர்.

சிங்கப்பூர் சுகாதாரத் தரச்சேவை விருது நிகழ்ச்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு ஓங் இதனைத் தெரிவித்தார்.

5 முதல் 11 வயது பிரிவில், 100,000 பேரில் 67 பேரை கொவிட்-19 தொற்றுகிறது என்று திரு ஓங் கூறினார்.

இந்தப் பிரிவினருக்கு அடுத்தபடியாக, 12 முதல் 19 வயதினரிடையே தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. இந்தப் பிரிவில், 100,000 பேரில் 55 பேரை கொவிட்-19 தொற்றுகிறது.

"டெல்டா அலையின்போது பெரும்பாலும் பெரியவர்களே தொற்றுக்கு ஆளாகினர். அதனுடன் ஒப்பிடும்போது இது சற்று வித்தியாசமாக உள்ளது," என்றார் திரு ஓங்.

தற்போது பெரிய வயதுப் பிரிவினரிடையே தொற்று விகிதம் குறைவாக உள்ளது என்ற அவர், அதுபற்றிய மேல்விவரங்களை வெளியிடவில்லை.