உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 மில்லியனைக் கடந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவில் மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒரு மாதத்திற்கு முன்னர் 300 மில்லியன் என்று இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஓமிக்ரானின் வேகமான பரவல் காரணமாக ஒரே மாதத்தில் கூடுதலாக 100 மில்லியனை எட்டிய தாக அந்த மையம் கூறியுள்ளது.
கொள்ளைநோயின் அடுத்த கட்டத்தைச் சமாளிப்பது எவ்வாறு என்று தனிப்பட்டவர்களும் அரசாங்கங்களும் போராடி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மலைக்க வைப்பதாக அது தெரிவித்தது.
உலக அளவில் 100 மில்லியன் பேருக்கு தொற்று ஏற்பட கிட்டத்தட்ட ஓராண்டுகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது ஒரே மாதத்தில் அந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் கிருமி பரவத்தொடங்கிய பின்னர் 2021 ஜனவரியில்தான் 100 மில்லியன் பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அடுத்த 100 மில்லியனை எட்ட ஏழு மாதங்கள் ஆகின.

