கல்வி அமைச்சர் சான்: கல்வி முறை பற்றிய சிங்கப்பூரர்களின் சிந்தனைப் போக்கு மாற வேண்டும்

கல்வி அமைச்சர் சான்: கல்வி முறை பற்றிய சிங்கப்பூரர்களின் சிந்தனைப் போக்கு மாற வேண்டும்

2 mins read
784c4547-1817-4de9-abad-1a79a39f55aa
புதிய பட்டதாரிகளை உருவாக்குவதோடு நின்றுவிடாமல் ஏற்கெனவே பட்டம் பெற்றவர்கள் மீதும் அவை கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார். பல்கலைக்கழகங்களின் பரிணமிக்கும் பணிகள் பற்றி வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று நடந்த தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கம் 2022ல் அமைச்சர் முக்கிய உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதிய பட்டதாரிகளை உருவாக்குவதோடு நின்றுவிடாமல் ஏற்கெனவே பட்டம் பெற்றவர்கள் மீதும் அவை கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் அரை மில்லியன் பேரை மேம்படுத்தி அவர்களை ஊழியர் அணியில் தக்கவைத்துக்கொள்வதும் பல்கலைக்கழகங்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஊழியர் சந்தைக்காக 30,000 முதல் 40,000 மாணவர்களை நல்ல முறையில் உருவாக்குவதோடு நின்றுவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

புதிய குறிக்கோளைச் சாதிக்கும் வகையில் கல்விமுறை மாற வேண்டிய அம்சங்கள் பற்றி அமைச்சர் விளக்கினார்.

பல்கலைக்கழகங்களின் பரிணமிக்கும் பணிகள் பற்றி வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று நடந்த தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கம் 2022ல் அமைச்சர் முக்கிய உரையாற்றினார்.

சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை வேறு வேலைக்கு மாறிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.

ஆகையால், சிங்கப்பூரர்கள் புதிய தேர்ச்சிகளையும் அறிவையும் கற்றுக்கொள்ளக்கூடிய வேகம் தீவிரமடைய வேண்டும் என்று திரு சான் தெரிவித்தார்.

உள்ளூர் ஊழியர் அணி ஏறத்தாழ 3 மில்லியன் பேரைக் கொண்டிருக்கிறது.

அவர்களில் கிட்டத்தட்ட 20% முதல் 25 விழுக்காட்டினர் ஆண்டுதோறும் தங்கள் திறன் தேர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

இதைச் சாதிக்க வேண்டுமானால் கல்வி முறையின் வெற்றி பற்றிய சமூகத்தின் எண்ணம் மாறவேண்டும் என்றார் அமைச்சர்.

கற்றதை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்ற கோட்பாடு அகலவேண்டும். தொடர்ந்து கற்று வருவதே வாழ்க்கை முழுவதற்கும் உதவியாக இருக்கும் என்பதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டும்.

வெற்றிக்கு, முன்பே வரையறுக்கப்பட்ட ஒரு வழி இருக்கிறது என்ற ஒரு யோசனையை சிங்கப்பூர் புறம் தள்ள வேண்டும்.

தேர்ச்சி, அறிவுச் சந்தையை எட்டுவதற்கான காலஅளவை சிங்கப்பூர் கல்வி முறை குறைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் திரு சான் கூறினார்.