இந்தியா செல்வோருக்கு பிப். 14 முதல் தளர்வுகள்; பிசிஆர் சோதனையும் 7 நாள் தனிமையும் தேவையில்லை

2 mins read
d0917a85-9c60-4def-a5eb-be3da8a1e690
இந்தியா செல்லும் அனைத்துலக விமானப் பயணிகள் பிப்ரவரி 14 முதல் பயணத் தளர்வுகளை எதிர்பார்க்கலாம். அனைத்துலகப் பயணிகளுக்கான கொவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய சுகாதார அமைச்சு  தளர்த்துவதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று அறிவிக்கப்பட்டது. படம்: நியூ யார்க் டைம்ஸ்  -

இந்தியா செல்லும் அனைத்துலக விமானப் பயணிகள் பிப்ரவரி 14 முதல் பயணத் தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.

அனைத்துலகப் பயணிகளுக்கான கொவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய சுகாதார அமைச்சு தளர்த்துவதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட 82 நாடுகளில் இருந்து செல்வோர், தங்களை ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

அத்துடன் அவர்கள் எட்டாவது நாளில் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளவும் தேவையில்லை.

ஆனாலும், பயணிகள் தங்களது உடல்நிலையை 14 நாள்களுக்குக் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தால் இனி பயணத்திற்குமுன் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.

மாறாக, அவர்கள் தங்களது தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்தால் போதும்.

அத்துடன் கொவிட்19 தொற்று அபாயமுள்ள நாடுகள் பட்டியலும் வேறு அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்துவதும் கைவிடப்படுகிறது.

புதிய தளர்வுகள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஹாங்காங், மாலத்தீவுகள், கத்தார், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 82 நாடுகளுக்குப் பொருந்தும்.

சீனாவும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 82 நாடுகளின் பட்டியலை இந்திய சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்கலாம்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

எல்லாப் பயணிகளும் 'ஏர் சுவிதா' இணையப்பக்கத்திற்குச் சென்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வழங்க வேண்டும்.

அத்துடன், தாங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களும் கொவிட்19 தடுப்பூசிச் சான்றிதழும் உண்மையானவை எனும் உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு உடல்வெப்ப நிலைச் சோதனைக் கருவிகள் வழியாக சோதனை நடத்தப்படும்.

பயணிகளில் 2 விழுக்காட்டினர், தரையிறங்கும் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

அவர்கள் உமிழ்நீர்/சளி மாதிரியைக் கொடுத்தபின் விமான நிலையத்தைவிட்டு வெளியேறலாம்.

இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரவுள்ளன.