போலி கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்கள் விற்றதன் தொடர்பில் 25 பேரை மலேசிய காவல்துறை கைது செய்தது.
அவர்களுள் மருத்துவர்கள் மூவர், தாதியர் மூவர், மருந்தக ஊழியர் ஒருவர், இடைத்தரகர்கள் எழுவர் அடங்குவர் என்று வணிகக் குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநர் முகம்மது கமருதீன் தெரிவித்தார்.
"இதன் தொடர்பில் கடந்த மாதத்திலிருந்து திரெங்கானு, சிலாங்கூர், சாபா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்பது சம்பவங்களைக் கண்டு பிடித்துள்ளோம்," என்று அவர் சொன்னார்.
"சாபாவின் கினருத் பகுதியில் மருத்துவர் ஒருவர் போலியாகத் தடுப்பூசிச் சான்றிதழ்களை விற்பனை செய்வதாக மருந்தக ஊழியர் ஒருவர் காவல்துறையிடம் சென்ற வாரம் புகாரளித்தார். இதனையடுத்து, 37 வயது மருத்துவர் ஒருவர் இம்மாதம் 7ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டார்," என்று திரு கமருதீன் கூறினார்.
இதனிடையே, கொவிட்-19 பரிசோதனைக் கருவி விற்பனை தொடர்பில் ஏமாற்றியதாக சிலாங்கூரில் இரு புகார்கள் வந்துள்ளன. சீனாவிலிருந்து பரிசோதனைக் கருவிகளை வாங்கித் தருவதாகக் கூறியதை அடுத்து, 710,000 மலேசிய ரிங்கிட்டைக் கொடுத்து இருவர் ஏமாந்தனர்.

