இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட 40 வயது பிச்சைக்காரர் ஒருவர், மின்னிலக்க முறையில் பிச்சையெடுத்து வியப்பளித்து வருகிறார்.
பீகார் மாநிலம், பெத்தியா ரயில் நிலையப் பகுதியில் பிச்சையெடுத்து வரும் ராஜு பட்டேல் (படம்) எனும் இம்மனிதர், விரைவு இணைப்புக் குறியீடு (கியூஆர்) அடங்கிய அட்டையைத் தம் கழுத்தில் தொங்கவிட்டுள்ளார். இவரிடம் உள்ள கைக்கணினி வாயிலாகவும் பிச்சை போடலாம்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஆதரவாளராகத் தம்மைக் கூறிக்கொள்ளும் இவர், பிரதமர் மோடியின் 'மனத்தின் குரல்' வானொலி உரையைக் கேட்கத் தவறுவதில்லையாம்.
"மின்னிலக்க முறையில் பிச்சையை ஏற்றுக்கொள்கிறேன். அப்படிக் கிடைக்கும் பணமே எனது வயிற்றை நிரப்பப் போதுமானதாக உள்ளது. சிறுவயதில் இருந்து இங்கு பிச்சை எடுத்து வருகிறேன். இந்த நவீன காலத்திற்கேற்ப எனது பிச்சையெடுக்கும் பாணியையும் மாற்றிக்கொண்டுள்ளேன்," என்று ராஜு கூறினார்.
"பிச்சையெடுத்தபின் ரயில் நிலையத்திலேயே உறங்கிவிடுவேன். வாழ்வாதாரத்திற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியாது.
"பிச்சை போட மனம் இருந்தாலும் சிலரிடம் சில்லறை இருப்பதில்லை. மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை வந்துவிட்ட நிலையில் கையில் காசு எடுத்துச் செல்ல தேவையில்லை என்று பயணிகள் பலர் கூறினர். அதனால், நானும் வங்கிக் கணக்கும் மின்பணப்பைக் (இ-வோலட்) கணக்கும் தொடங்கிவிட்டேன்," என்றார் ராஜு.
ஆனாலும், பெரும்பாலோர் இன்னும் காசாகவே பிச்சையிடுவதாகவும் ஒரு சிலர் மின்னிலக்க முறையில் பணத்தை மாற்றிவிடுவதாகவும் இவர் குறிப்பிட்டார்.
வங்கிக் கணக்கு தொடங்க 'ஆதார்' அட்டையும் வருமானவரிக் கணக்கு எண் அடங்கிய 'பான்' அட்டையும் தேவை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால், இவர் தாமாகவே 'பான்' அட்டைக்கும் விண்ணப்பித்து, அதனைப் பெற்றார்.

